ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'க்ரூ-4 ' (Crew-4) திட்டத்தின் மூலம் 3 நாசா விண்வெளி வீரர்கள், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இத்தாலி வீரர் ஒருவர் என 4 வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 மாத காலம் ஆராய்ச்சிக்குப் பிறகு 4 வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'க்ரூ-5 ' (Crew-5) திட்டத்தின் மூலம் புதிய வீரர்கள் விண்வெளிக்கு சமீபத்தில் சென்ற நிலையில், 'க்ரூ-4 ' திட்டத்தின் வீரர்கள் தங்கள் பணிகளை முடித்து மீண்டும் பூமிக்கு திரும்பினர். வீரர்கள் தரையிறங்கும் நிகழ்ச்சியை நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து நேரலை செய்தனர்.
ஏப்ரல் 27-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. க்ரூ-4 குழுவில் நாசா விண்வெளி வீரர்கள் கேஜெல் லிண்ட்கிரென்(49), ஜெசிகா வாட்கின்ஸ்(34), பாப் ஹைன்ஸ்(47) மற்றும் இத்தாலி வீரர் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி(45) ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். சமந்தா ஐஎஸ்எஸ் பயணத்தின் தளபதியாக செயல்பட்டார். நீண்ட கால ஐஎஸ்எஸ் பணியில் இடம்பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் என்ற பெருமையை
வாட்கின்ஸ் பெற்றார்.
குழு வீரர்கள் ராக்கெட்டில் பயணித்து பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கினர். வீரர்கள் இறங்கிய உடன் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி, விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த போது, குழுவினர் பூமியை 2,720 முறை சுற்றினர் - சுமார் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வந்தனர்.
ஐஎஸ்எஸ் குழுக்களின் முதன்மை நோக்கம் அறிவியல் அடிப்படையிலானது மற்றும் பல பரிசோதனைகள் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை உள்ளடக்கியது.
முதுமையுடன் தொடர்புடைய மனித உயிரணுக்களில் மைக்ரோ கிராவிட்டி-தூண்டப்பட்ட மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு, இரைப்பை குடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விண்வெளியில் தீ மற்றும் எரிபொருள் செயல்பாடு, மண்ணுக்குப் பதிலாக திரவ மற்றும் காற்று மூலப் பொருட்கள் மூலம் தாவர வளர்ச்சி ஆகியவை குறித்து ஐஎஸ்எஸ் குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil