எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் 3 நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் வியாழக்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தலா 1 விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த 2 வீரர்கள் ஐ.எஸ்.எஸ்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பேஸ்எக்ஸ்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் எனப்படும் விண்கலம் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று அதிகாலை 12:34 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. க்ரூ-6 திட்டம் வழக்கமான வீரர்கள் சுழற்றி திட்டம் என்று நாசா கூறியது.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை க்ரூ-6 திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. திட்டமிட்டபடி4 வீரர்களும் விண்கலத்தில் அமர்ந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது. கடைசி 2 நிமிடத்தில் ஏவுதல் நிறுத்தப்பட்டது.
நாசா கூறுகையில், வானிலை சாதகமாக இருந்தபோதிலும், ராக்கெட் என்ஜின் எரிபொருள் திரவமாகப் பயன்படுத்தப்படும் பைரோபோரிக் கலவையான ட்ரைஎதில்அலுமினியம்-ட்ரைஎதில் போரேன் (TEA-TEB) திரவத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (மார்ச் 1) நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வாரன் “வுடி” ஹோபர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) விண்வெளி வீரர் சுல்தான் அல்னியாடி மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் ஆகியோர் 6 மாத கால ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பபட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/