கடைசியாக நிலவை எப்பொழுது ரசித்துப் பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? ஞாபகம் வராவிட்டாலும் பரவாயில்லை. இன்றைக்கு நிலவைப் பார்க்க மறந்து விடாதீர்கள்.
இன்று இரவு வானத்தை சூப்பர் ப்ளூ மூன் அலங்கரிக்கும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வு, உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி.
வழக்கமான பெளர்ணமி விட, சூப்பர் மூன்கள் தோராயமாக 40% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும், ஆனால் அப்படி பார்ப்பதால் அதன் அளவுகளில் பெரிய வித்தியாசத்தை நம்மால் கவனிக்க முடியாது.
இன்று (ஆகஸ்ட் 30) இரவு இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் தோன்றும். அந்த நேரத்தில் நிலவு மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இது படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7.30 மணிக்கு உச்சம் தொடும்.
அமெரிக்காவில் இரவு 8.37 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை பார்க்கலாம். லண்டனில் இரவு 8.08 மணிக்கு பார்க்க முடியும். வானில் சரியாக பார்க்க முடியாதவர்கள் The Virtual Telescope Project என்ற வெப் டிவியின் மூலம் நேரலையில் பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31, 2023 அன்றும் இதைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தில் இது இரண்டாவது சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு ஆகும். முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தோன்றியது.
ஒரு மாதத்தில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுகள் 2018 இல் நிகழ்ந்தது, இனி 2037 ஆம் ஆண்டு தான் இதுபோல ஒரு அரிய நிகழ்வு நடைபெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“