/indian-express-tamil/media/media_files/2025/10/30/rogue-wave-2025-10-30-13-57-32.jpg)
4 மாடி உயரத்திற்கு எழுந்த ராட்சத கடல் அலைகள்... 1,300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் விநோதம் கனடாவில் பதிவு!
கனடாவின் வான்கூவர் தீவின் கடற்கரைக்கு அப்பால், எந்தவித எச்சரிக்கையும் இன்றி ஒரு பிரம்மாண்டமான அலை திடீரெனக் கிளம்பியது. அதன் உயரம், நீங்க கற்பனை செய்யும் 4 மாடிக் கட்டிடத்திற்கு சமம். வெறும் சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிகழ்வு, உலகின் கடல் விதிகள் மற்றும் விஞ்ஞானக் கணிதங்களை மீறிய ஒரு விநோதத்தைக் குறித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) உக்லுலெட் என்ற சிறிய நகரத்தின் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மெரைன் லேப்ஸ் மிதவை , இந்த ராட்சத அலையை மௌனமாகப் பதிவு செய்தது. இந்த அலையின் உயரம் 17.6 மீட்டர்கள் (சுமார் 58 அடி). இது உலகின் மிக உயரமான அலை அல்ல என்றாலும், இதுவே மிகவும் விசித்திரமானது. காரணம், இந்த அலை சுற்றியிருந்த மற்ற அலைகளை விட கிட்டத்தட்ட 3 மடங்கு உயரமானது. புள்ளியியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வளவு தீவிரமான ஒரு அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 1,300 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமேயாகும். எளிமையாகச் சொன்னால், இந்த அலை பதிவு செய்யப்பட்டிருக்கவே சாத்தியமற்றது.
"நீரால் ஆன சுவர்கள்" என்று பல நூற்றாண்டுகளாகக் கடலோடிகளால் வர்ணிக்கப்பட்ட ரக் அலைகள் (Rogue waves), பெரும்பாலும் கடல் கட்டுக் கதைகளாகவே கருதப்பட்டன. இந்த அலைகள் பெரிய கப்பல்களைகூட மொத்தமாக விழுங்கிவிடுவதாகச் சொல்லப்பட்டன. 1995-ல், வட கடலில் உள்ள எண்ணெய் தளத்தைத் தாக்கிய 26 மீட்டர் உயரமுள்ள 'டிராப்னர் அலை' (Draupner wave), கருவிகளால் பதிவு செய்யப்பட்ட முதல் ரக் அலையாக மாறியது. அதன் பிறகே, விஞ்ஞானிகள் இந்த அலைகள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல, நிஜமான அபாயம் என்பதை ஏற்றுக் கொண்டனர்.
ரக் அலைகள் என்பவை, சுற்றியுள்ள அலைக் களத்தை விட குறைந்தது 2.2 மடங்கு உயரமான அலைகளாகும். ஆனால், 2020 நவம்பரில் பதிவான இந்த அலை, அந்த எல்லையையும் தாண்டி, இயற்கையின் ஒரு விசித்திரமான, எதிர்பாராத நிகழ்வாக அமைந்தது. விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிட்ட ஆய்வின்படி, 2-ம் நிலை அலை கோட்பாட்டின் அடிப்படையில், இவ்வளவு தீவிரமான ஒரு அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமேயாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us