/indian-express-tamil/media/media_files/2025/10/30/dreaming-during-deep-sleep-2025-10-30-12-50-10.jpg)
தூக்கத்திலும் வேலை செய்யும் மூளை... என்.ஆர்.இ.எம். நிலையில் கனவு காண்பதை ஏ.ஐ. மூலம் உறுதி செய்த ட்ரீம் ஆய்வு!
நீங்க ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, உங்க மூளை 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகிவிடுகிறது என்று நீங்க நினைத்தால், அது தவறு. சர்வதேச விஞ்ஞானிகள் குழு புதிய ஆய்வு முடிவுகள் உங்க இரவு ஓய்வு குறித்த எண்ணத்தை அடியோடு மாற்றப் போகிறது. ட்ரீம் திட்டம் (Dream EEG and Mentation Database) என்ற பிரம்மாண்ட ஆய்வின்படி, நம்முடைய மூளையின் சில பகுதிகள் ஆழ்ந்த தூக்கத்தின் போதும் கூட விழிப்புணர்வுடன் (Alert) இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், வண்ணமயமான கனவுகளைக் காண, நீங்க கட்டாயம் REM (Rapid Eye Movement) தூக்கத்தில் இருக்கத் தேவையில்லை. கனவு காண்பது என்பது ஆர்.இ.எம். தூக்கத்தின் தனிப்பட்ட சாம்ராஜ்யம் என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால், 13 நாடுகளில் இருந்து 505 தன்னார்வலர்களின் 2,643 விழிப்புத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்தபோது கிடைத்த டேட்டா முற்றிலும் வேறுபடுகின்றன:
பல ஆண்டுகளாக, தெளிவான உருவங்கள் மற்றும் உடல் முடக்கம் போன்றவற்றுடன் கூடிய கனவுகள், ஆர்.இ.எம். தூக்கத்தில் மட்டுமே நிகழ்கின்றன என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ட்ரீம் டேட்டா இந்த எண்ணத்தை மாற்றியமைக்கின்றன. ஆய்வின்படி, ஆர்.இ.எம். தூக்கத்தின் போது எழுப்பப்பட்டவர்களில் சுமார் 85% பேர் கனவு கண்டதாகத் தெரிவித்தனர். ஆச்சரியப்படும் விதமாக, என்.ஆர்.இ.எம். (Non-REM) தூக்கத்தின்போது எழுப்பப்பட்டவர்களில் 40% முதல் 60% பேர் வரை கனவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆழ்ந்த தூக்க நிலையான 'மெதுவான அலைக் கொண்ட தூக்கத்தின்போதே' (Slow-Wave Sleep) சிலர் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் அல்லது துண்டு துண்டான உணர்வுகளை விவரித்தனர்.
விழித்திருப்பது போல் நடிக்கும் மூளை!
ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் எழுவதற்கு முந்தைய 30 வினாடிகளில் அவர்களின் மூளைச் செயல்பாட்டை EEG, MEG தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணித்தனர். அப்போது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிப்பட்டது: என்.ஆர்.இ.எம். தூக்கத்தில் ஒருவர் கனவு காணும்போது, அவரது மூளை அலைகள் திடீரென வேகமான, சிறிய அலைவுகளாக மாறத் தொடங்குகின்றன. இந்த அமைப்பு, அமைதியான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் ஒருவரின் மூளை அலைகளைப் போலவே இருந்தது.
இதன்பொருள் என்னவென்றால், உங்க உடல் அசைவற்று ஆழ்ந்து உறங்கினாலும், மூளையின் ஒருபகுதி மட்டும் தற்காலிகமாக 'விழிப்பு' நிலைக்கு சென்று தகவல்களைச் செயலாக்கத் தொடங்குகிறது. இது, தூக்கத்தின்போது நம்முடைய விழிப்புணர்வு என்பது 'ஆன்/ஆஃப்' சுவிட்ச் போல இல்லாமல், ஒரு நிறமாலையின் (Spectrum) நிலை என்பதை நிரூபிக்கிறது.
இனி கனவுகளையும் ஏ.ஐ. படிக்கும்
இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான ஸ்டெப், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) கனவுகளைக் கண்டறியப் பயிற்சி அளித்ததுதான். விழிப்புணர்வு அனுபவங்களை (தெளிவான கனவு, நினைவில் இல்லாத வெள்ளை கனவு, கனவு இல்லை) 3 வகைகளாகப் பிரித்து, மூளை செயல்பாட்டை மட்டும் வைத்து ஒருவர் கனவு கண்டாரா என்று கணிக்க ஏ.ஐ.-க்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் தூக்கத்தின்போது விழிப்புணர்வைக் கண்காணிக்கலாம். அல்சைமர் போன்ற அறிவாற்றல் குறைபாடுகளுக்கு ஆரம்பகால எச்சரிக்கை குறியீடாகப் பயன்படுத்தலாம் (ஆர்.இ.எம். தூக்கத்தை அடைவதில் உள்ள சிரமம் அல்சைமர் நோய் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது). மோனாஷ் பல்கலைக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மகத்தான ஆய்வு, பல தசாப்த கால கனவு ஆராய்ச்சியை ஒன்றிணைத்து, மனித நனவு குறித்த அறிவியல் ஆய்வில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us