அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் விண்வெளி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தினமும் புது புது தகவல்கள், ஆச்சரியம் ஊட்டும் கண்டுபிடிப்புகள் வெளியாகி வருகின்றன. பல காலங்களாக நம்மில் பலருக்கும், ஏன் விஞ்ஞானிகளுக்கும் கூட இந்த கேள்வி இருந்து வந்தது. பூமி போன்றே மற்றொரு கிரகம் இருக்கிறதா? என யோசித்து இருப்போம். ஏன் கூகுளில் கூட தேடி பார்த்திருப்போம்.
அந்தவகையில், தற்போது பூமியைப் போலவே 2 கிரகங்கள் இருப்பதாகவும், அதுவும் நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி 2.0 என்ற நம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு உயர்த்தியுள்ளது.
சர்வதேச வானியலாளர்கள் குழு ஒன்று, பூமியைப் போன்ற எடை கொண்ட 2 கோள்களைக் கண்டறிந்துள்ளது. மேலும் அது சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் கூறியுள்ளனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது நமது சூரிய குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை, வெறும் 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
"பூமி போன்ற கிரகங்கள் மிகவும் பொதுவானவை என்பதை இயற்கை நமக்கு காட்டுகிறது. இந்த இரண்டின் மூலம், சூரியனுக்கு மிக அருகில் உள்ள 7 கிரக அமைப்புகளை நாங்கள் இப்போது அறிகிறோம்" என ஆய்வின் முதன்மை ஆசிரியர் அலெஜான்ட்ரோ சுரேஸ் மஸ்கரேனோ கூறுகிறார். ESPRESSO மற்றும் CARMENES ஆகிய இரண்டு கருவிகளின் கூட்டமைப்பின் போது கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. GJ 1002 கருவி CARMENES கிரகத்தை 2017 மற்றும் 2019 க்கு இடையில் அறியப்பட்டதாகவும், ESPRESSO 2019 மற்றும் 2021 க்கு இடையில் அறியப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
GJ 1002b நட்சத்திரத்தைச் சுற்றி வர 10 நாட்களுக்கு மேல் எடுக்கிறது. அதே நேரத்தில் GJ 1002c-க்கு 21 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த கோள்கள் நமது சூரிய மண்டலம் மற்றும் பூமிக்கு அருகில் உள்ளது என வானியலாளர்கள் உற்சாகமாக உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பூமிக்கு மிக அருகில் கிரகங்கள் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை. கடந்த 2017-ம் ஆண்டு நாசா டிராப்பிஸ்ட்-1 (TRAPPIST-1) என்று அழைக்கப்படும் பூமி போன்ற கோள்ளை கண்டுபிடித்ததாக அறிவித்தது. இது சூரிய குடும்பத்தில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இந்த அமைப்பில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.