குலசேகரப்பட்டினம் ராக்கெட் தளத்திற்கு இதுவரை 1,950 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்: மத்திய அரசு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இதுவரை 1,950 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் தளத்திற்கு இதுவரை 1,950 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்: மத்திய அரசு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மாசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்நிலையில் மாநிலங்களவை திமுக எம்.பி வில்சன் முக்கிய கேள்வி எழுப்பியிருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்தின் தற்போதைய நிலை என்ன? இதன்மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் RESPOND திட்டத்தின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (ஜூலை 21) எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், “குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்படும் 2,350 ஏக்கர் நிலப்பரப்பில் 1,950 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளப்பணிகள் நிறைவடையும் தருவாயில், ஆட்கள் தேவை குறித்து தெரியவரும். அதன் விவரங்கள் சேகரிக்கப்படும்.

RESPOND திட்டத்தின் கீழ் 49 களப்பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 21 திட்டங்கள் சென்னை ஐஐடியின் ஸ்பேஸ் டெக்னாலஜி செல் மூலமும், 9 திட்டங்கள் என்.ஐ.டி திருச்சி ஸ்பேஸ் டெக்னாலஜி இன்குபேஷன் சென்டர் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி ஸ்பேஸ் டெக்னாலஜி தொடர்பாக 63 திட்டங்களும், ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் தொடர்பாக 13 திட்டங்களும், ஸ்பேஸ் சயின்சஸ் தொடர்பாக 3 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 23 கல்வி நிறுவனங்கள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் இரண்டு ஏவுதளங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Union minister jitendrasingh reply to dmk mp wilson to the question of current status of the spaceport at kulasekharapattinam in tamil nadu

Exit mobile version