சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர்கள் 3 பேர் நீல நிறம் கலந்த மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தது பேசு பொருளாக மாறியது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் புரிந்து வரும் நிலையில் இந்த 3 ரஷ்ய வீரர்களும் விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.
அப்போது அவர்கள் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே நீலம் கலந்து உடை அணிந்திருந்தனர்.
இது ஏன் பேசு பொருளாக மாறியது என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது.
உக்ரைன் தேசிய கொடியின் வண்ணங்களும் இதேதான். மஞ்சள்-நீலம்.
இதை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால் தான் இந்த விஷயம் பேசு பொருளானது. சமீபத்தில் விண்வெளியில் இருந்து ரஷ்ய வீரர்கள் 2 பேருடன் வான்டே ஹெய் என்ற அமெரிக்கரும் பூமிக்கு திரும்பினார்.
அவரிடம் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் தனது அனுபவத்தை பற்றியும் இந்த உடை தொடர்பாகவும் சில கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது:
ரஷ்யாவில் உள்ள பவுமேன் மாஸ்கோ ஸ்டேட் டெக்னிக்கல் பல்கலைக்கழகத்தின் வண்ணங்கள் தான் மஞ்சளும் நீலமும். அதை சுட்டிக்காட்டும் வகையில் தான் அவர்கள் அந்த வண்ணங்களில் உடை அணிந்திருந்தனர்.
அவர்கள் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் அதன்மூலம் வெளிப்படுத்தவில்லை. ரஷ்யாவின் விண்வெளி திட்ட தலைவர் டிமிட்ரி ரோகோஸின், என்னை விண்வெளியிலேயே விட்டுவிட்டு மீதி இரண்டு ரஷ்ய வீரர்களும் வந்திருக்கலாம் என்று வீடியோவில் பேசியதை எனது மனைவிதான் என்னிடம் கூறினார்.
நான் அதை தீவிரமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரஷ்ய வீரர்களுடன் நாங்கள் மிகுந்து ஒத்துழைப்பை வழங்கி வந்தோம். ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாங்கள் எதுவும் அதிகம் பேசிக் கொண்டதில்லை. ஆனால், நான் ரஷ்ய வீரர்களின் அவர்களின் கருத்தை கேட்டிருக்கிறேன்.
இதையும் படியுங்கள்: பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: இந்திய தூதரை அழைத்து பேசிய பிலிப்பைன்ஸ் அரசு
நான் அவர்களுடன் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றுவதை விரும்புகிறேன். எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த கெட்டிக்காரர்கள். நான் பூமிக்கு திரும்பிய பிறகு புவியீர்ப்பு விசைக்கு பழகி வருகிறேன். நான் இன்னும் சங்கடமாகவே உணர்கிறேன் என்றார்.
வான்டே ஹெய் விண்வெளியில் 355 நாட்கள் இருந்து புவிக்கு திரும்பினார். இவர்தான் அதிக நாட்கள் விண்வெளி தங்கியிருந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil