/indian-express-tamil/media/media_files/2025/10/13/ghost-flowers-2025-10-13-12-43-51.jpg)
சூரிய ஒளியே தேவையில்ல... இலைகளே இல்லாமல் மண்ணுக்கு அடியில் வாழும் 'கோஸ்ட் பூ' பற்றி தெரியுமா?
இயற்கையின் விசித்திரமான மற்றும் அழகான படைப்புகளில் ஒன்றுதான் 'கோஸ்ட் மலர்கள்' (Ghost Flowers). இவற்றின் நிறம், பெரும்பாலும் வெளிறிய வெள்ளை போன்ற நிறத்தில் இருக்கும். சூரிய ஒளியோ? அல்லது ஒளிச்சேர்க்கையோ? இல்லாமல் இவை வாழும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளதால், இவை தாவர உலகத்தின் 'பேய்' என்றழைக்கப்படுகின்றன. நிழல் அடர்ந்த காடுகளில் இவற்றைக் காண முடியும்.
கோஸ்ட் பூ என்றால் என்ன?
கோஸ்ட் பூ என்பது 'மோனோட்ரோபா யூனிஃப்ளோரா' (Monotropa uniflora) என்ற தாவரத்தின் பெயர். இது 'கோஸ்ட் பிளான்ட்', 'இந்தியன் பைப் பிளான்ட்', 'கார்ப்ஸ் பிளான்ட்' அல்லது 'ஐஸ் பிளான்ட்' போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சாதாரண பச்சைத் தாவரங்களைப் போலல்லாமல், கோஸ்ட் பூ எப்போதும் சுத்தமான வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் குளோரோஃபில் (Chlorophyll) என்ற நிறமி இவற்றில் இல்லாததே இதற்கு காரணம். சில சமயங்களில், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு அரிதான சிவப்பு வகைகளையும் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்.
குளோரோஃபில் இல்லாமல் இவை எப்படி உயிர் வாழ்கின்றன?
சூரிய ஒளியிலிருந்து சொந்தமாக உணவைத் தயாரிப்பதற்குப் பதிலாக, கோஸ்ட் பூ முற்றிலும் மாறுபட்ட தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன. அதாவது, மண்ணுக்கு அடியில் உள்ள பூஞ்சைகளை தங்கள் உணவுக்காகப் பயன்படுத்துகின்றன. இந்த பூஞ்சைகள் மரங்களின் வேர்களுடன் இணைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. கோஸ்ட் பூ, இந்தப் பிணைப்பிற்குள் புகுந்து ஒரு ஒட்டுண்ணியைப் போல வாழ்கிறது. இது பூஞ்சைகளிலிருந்து கார்பன் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் திருடி, காட்டின் இந்த வேர் பிணைப்பு அமைப்பிலிருந்து உணவைப் பெறுகிறது என்று Science.org செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சூரிய ஒளி தேவைப்படாததால், இவை ஆழமான, இருண்ட காடுகளில்கூட செழித்து வளர்கின்றன. பம்பிள்தீ (Bumblebees) எனப்படும் தேனீக்கள்தான் கோஸ்ட் மலரின் முக்கிய மகரந்தச் சேர்க்கையாளர்கள் ஆகும்.
உங்க தோட்டத்தில் ஏன் வளராது?
இந்த பூ பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தாலும், இவற்றைத் தோட்டத்தில் நட்டு வளர்ப்பது அல்லது பரப்புவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனெனில், இவற்றின் உயிர்வாழ்வு மிக பிரத்தியேகமான மண்ணுக்கு அடியில் உள்ள பூஞ்சை வலைப்பின்னலை நம்பியுள்ளது. இந்த வலைப் பின்னல் பெரும்பாலான தோட்டங்களில் கிடைப்பதில்லை. கோடை அல்லது இலையுதிர்காலத்தின் ஆரம்பத்தில், இலையுதிர் சருகுகளுக்கு இடையில் இவற்றின் வெளிறிய தண்டுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் காடுகளில் காண்பதுதான் சிறந்ததாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.