/indian-express-tamil/media/media_files/2025/09/23/cloud-density-2025-09-23-22-23-03.jpg)
மேகங்கள் ஏன் மிதக்கின்றன? ஆச்சரியப்படுத்தும் அறிவியல் விளக்கம்!
வானத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், பஞ்சு போன்ற மேகங்கள் எப்படி உயரத்தில் மிதக்கின்றன? என்று நாம் வியப்பதுண்டு. பல ஆயிரம் டன் எடை கொண்ட மேகங்கள், காற்று மண்டலத்தில் எப்படி கீழே விழாமல் மிதக்கின்றன? இதன் பின்னால் உள்ள சுவாரசியமான அறிவியல் காரணத்தைப் பார்ப்போம்.
மேகம் என்பது வெறும் நீராவி மட்டுமல்ல. அது கோடிக்கணக்கான மிக நுண்ணிய நீர் துளிகள், பனித் துகள்கள், தூசி மற்றும் மகரந்தத் துகள்கள் ஆகியவற்றின் கலவை. இந்தத் துளிகள் மிகவும் சிறியவை. ஒரு பெரிய மேகத்தில் உள்ள ஒரு துளி, ஒரு மழைத்துளியை விட 1 மில்லியன் மடங்கு சிறியதாக இருக்கும்.
சூரிய வெப்பத்தால் பூமி, ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் உள்ள நீர் ஆவியாகி, நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியானது சூடான காற்றை விட இலகுவானது என்பதால், மேலே எழும்பத் தொடங்குகிறது. வளிமண்டலத்தில் மேலே செல்லும்போது, வெப்பநிலை குறைகிறது. குளிர்ந்த காற்று, நீராவியை சுருக்கி, கண்ணுக்கு தெரியாத சிறிய நீர் துளிகள் (அ) பனித் துகள்களாக மாற்றுகிறது. இந்த நீர் துளிகள், வளிமண்டலத்தில் உள்ள தூசித் துகள்களை ஒட்டி ஒன்றிணைந்து, நாம் பார்க்கும் மேகங்களாக மாறுகின்றன.
மேகங்கள் மிதப்பதற்கான காரணம் என்ன?
மேகங்கள் கீழே விழாமல் மிதப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன.
மிக மிக குறைவான அடர்த்தி: மேகங்கள் பல மில்லியன் நீர் துளிகளைக் கொண்டிருந்தாலும், அவை மிக அதிக பரப்பளவில் பரவியுள்ளன. இதனால், மேகத்தின் மொத்த அடர்த்தி, அதைச் சுற்றியுள்ள காற்றை விடக் குறைவாகவே இருக்கும். ஒரு பெரிய பலூன் காற்றில் மிதப்பதுபோல, மேகங்களும் குறைந்த அடர்த்தி காரணமாக மிதக்கின்றன.
மேலே எழும்பிச் செல்லும் காற்றின் அழுத்தம் (Updraft): பூமியில் இருந்து சூடாகி மேலே எழும்பிச் செல்லும் காற்று தொடர்ந்து மேகங்களுக்கு கீழே ஒருவித அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். இந்த அழுத்தம், மேகங்களை கீழே விழவிடாமல், எழும்ப செய்து மிதக்க வைக்கிறது. ஒரு பொருளை நாம் தண்ணீருக்குள் அழுத்திப் பிடிக்கும்போது, அது மீண்டும் மேலே வருவது போல, இந்த சூடான காற்று மேகங்களை மேலே தள்ளுகிறது.
மேகங்களில் உள்ள நீர் துளிகள், ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய மழைத்துளியாக மாறும் வரை மேகங்கள் மிதந்துகொண்டே இருக்கும். இந்தத் துளிகள் போதுமான அளவு கனமானவுடன், காற்றின் அழுத்தத்தால் தாங்க முடியாமல் ஈர்ப்பு விசையால் கீழே விழுகின்றன. இதுவே மழை என்று அழைக்கப்படுகிறது. எனவே, மேகங்கள் வெறும் பஞ்சு போன்ற பொருட்கள் அல்ல, அவை கோடிக்கணக்கான நீர் துளிகள். அடர்த்தி குறைவு மற்றும் மேலே எழும்பிச் செல்லும் காற்றின் அழுத்தம் காரணமாகவே, அவை கீழே விழாமல் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.