நிருபர் கேள்வி: கேப்டன் விராட் கோலி இல்லாதது அணிக்கு பாதகம் தானே?
அம்பதி ராயுடு: கோலி இல்லாதது உண்மையில் பெரிய இழப்பு தான். ஆனால், இந்தியாவின் ஆல் டைம் கேப்டன் தோனி அணியில் இருக்கிறாரே!.
நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன், நிருபரின் கேள்விக்கு அம்பதி ராயுடு அளித்த பதில் இது.
யெஸ்... இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராக தோனியின் பெயருக்கு எப்போதும் இடமுண்டு.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வந்தது, ஆஸ்திரேலியாவில் ஒரு கோப்பையை கூட கைப்பற்றாத குறையை 2008 சிபி சீரிஸில் வென்று பூர்த்தி செய்தது, தொடரில் மோதும் எதிரணிகளை வீழ்த்தி அந்த அணிகளின் கேப்டன்களை பதவி விலக வைத்தது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது, சாம்பியன்ஸ் டிராபி வென்றது, DRS என்றால் தோனி ரிவியூ சிஸ்டம் என்று புது விளக்கம் கொடுத்தது என கிரிக்கெட்டுக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் தோனி ஆற்றிய பங்கு என்பது மகத்தானது.
ஆனால், தோனி கேப்டனான பிறகு அவர் வென்ற முதல் ஐசிசி டிராபி எது தெரியுமா?
2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான்.
சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாத இளம் இந்திய டி20 அணிக்கு தலைமையேற்ற 'பரட்டை' தோனி, 11 வருடங்களுக்கு முன்பு, இதே செப்டம்பர் 24ம் தேதி தான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டார். பாகிஸ்தானின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவால், மிஸ்பா உல் ஹக்கை மட்டும் அவுட்டாக்க முடியவில்லை.
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், கடைசி ஓவரை வீச, ஜோகிந்தர் ஷர்மாவை தோனி அழைத்தது இன்றும் எக்ஸ்பெர்ட்களால் புரிந்து கொள்ள முடியாத ஸ்டிராடஜி. அந்த ஓவரில் மிஸ்பா சிக்சர் அடித்தும், பதட்டப்படாமல், ஜோகிந்தருக்கு அட்வைஸ் கொடுத்து, அடுத்த பந்தில் 'இன் தி ஏர்ர்ர்ர்ர்ர்ர்.... ஸ்ரீசாந்த் டேக்ஸ் இட்' என்று ரவி சாஸ்திரியை கதறவிட்டு, ஒட்டுமொத்த இந்தியர்களின் கண்களில் கண்ணீரை வர வைத்த பெருமை தோனியையே சாரும். இந்திய தேசமே அந்த இரவை கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/d325-300x217.jpg)
காலச்சக்கரம் வேகமாக சுழல, தோனி தன் கையில் ஏந்திய முதல் ஐசிசி டிராபி சம்பவம் அரங்கேறி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நினைக்கும் போது இன்னும் ஆச்சர்யமே மிஞ்சுகிறது.
லவ் யூ தோனி!!