இன்று தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் இன்று தொடங்குகிறது.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 17) இந்தோனேசியாவில் தொடங்குகிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை  இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க உள்ளன.

நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. நாளை முதலே போட்டிகள் ஆரம்பமாகிறது. கோலாகலமான தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. விழாவில், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close