செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் தமிழக அணியும், ஹைதராபாத் அணி அணியும் மோதின.
இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரக்னே ரெட்டி (23 பந்துகள் 30 ரன்கள்), சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற, நிதானமாக விளையாடிய பாவனக சந்தீப் 36 பந்துகளில் 2 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்து 41 ரன்களை சேர்த்தார். இதுவே அந்த அணி 152 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தது.
பின்னர் களமிறங்கிய தமிழக அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார். அதோடு ஜெகதீசன் இந்த தொடரில் தனது 3வது அரை சதத்தையும் பதிவு செய்தார்.