துபாயில் நடந்த 9-வது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. இந்தப் போட்டிக்குப் பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை வெளிப்படுத்துவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரோகித் அதனை மறுத்துவிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Rohit Sharma has got no reason to retire’: AB de Villiers backs India captain to continue
இது தொடர்பாக இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரோகித் சர்மா பேசுகையில், "ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறப்போவது இல்லை. தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை. எது நடக்கிறதோ அது நடந்து கொண்டே இருக்கும்.
இறுதிப் போட்டியில் நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆட்டங்களில் செய்ததையே செய்தேன். பவர் பிளேயில் ரன்கள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் 10 ஓவர்களுக்குப் பிறகு, பீல்டிங் விரிவடைந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வரும்போது ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினமாகிவிடும்." என்று அவர் கூறினார்.
டிவில்லியர்ஸ் ஆதரவு
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக வந்த வதந்திகளை இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவான் ஏ.பி டிவில்லியர்ஸ் அவர் பெரும் ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக ரோகித்தின் மிகச்சிறந்த சாதனையை பாராட்டியிருக்கும், டிவில்லியர்ஸ், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் தனது பேட்டிங்கை மறுசீரமைத்ததற்காக அவரைப் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது, ரோகித்தின் வெற்றி சதவீதத்தைப் பாருங்கள், இது கிட்டத்தட்ட 74% ஆகும், இது கடந்த காலத்தின் வேறு எந்த கேப்டனையும் விட கணிசமாக அதிகம். அவர் தொடர்ந்து விளையாடினால், அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கேப்டன்களில் ஒருவராக இருப்பார். ரோகித் தான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும், வதந்திகள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
துபாயில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் 252 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திட அணியை ரோகித் வழிநடத்தினார், பவர்பிளேயில் கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். 37 வயதான அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்படி இருக்கும் போது, அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்? கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு பேட்டராகவும் அந்த வகையான சாதனையுடன் இருக்கிறார். இறுதிப் போட்டியில் அந்த 76 ரன்கள், இந்தியாவுக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கொடுத்தது, வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது மற்றும் அழுத்தம் உச்சத்தில் இருந்தபோது முன்னணியில் இருந்து வழிநடத்தியது என அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
ரோகித் சர்மா ஓய்வு பெற எந்த காரணமும் இல்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள எந்த காரணமும் இல்லை. அவரது சாதனை அவருக்காகப் பேசுகிறது. அது மட்டுமல்லாமல், அவர் தனது ஆட்டத்தையும் ஓரளவு மாற்றியுள்ளார். பவர்பிளேயில் அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தால், பவர்பிளேயில் ஒரு தொடக்க பேட்டருக்கு அது மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் 2022 முதல் அவரது ஸ்ட்ரைக் ரேட் முதல் பவர்பிளேயில் 115 ஆக உயர்ந்துள்ளது, அதுதான் நல்லதற்கும் சிறந்ததற்கும் உள்ள வித்தியாசம். இது உங்கள் சொந்த ஆட்டத்தை மாற்றுகிறது, அது ஒருபோதும் நிற்காது. நீங்கள் எப்போதும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும், சிறப்பாகச் செய்ய ஏதாவது இருக்கும்," என்று அவர் கூறியிருக்கிறார்.