இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி-20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்த நிலையில், அந்த பதவியில் கம்பீரை கடந்த 9 ஆம் தேதி அன்று பி.சி.சி.ஐ நியமித்தது.
டிராவிட் ஓய்வு பெற்ற சூழலில், அவருடன் துணை ஊழியர்கள் குழுவில் இருந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர். எனவே, அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தையும் வழங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் (கே.கே.ஆர்) கம்பீருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் காலத்தில் இந்திய அணிக்கு அதிகாரப்பூர்வ உதவி பயிற்சியாளர்கள் இல்லை. தற்போது இந்திய கிரிக்கெட்டில் இரண்டு உதவிப் பயிற்சியாளர்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும். நெதர்லாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டரும் கே.கே.ஆரில் ஒரு வீரராக கம்பீருடன் டிரஸ்ஸிங் ரூமை டென் டோஸ்கேட் பகிர்ந்து கொண்டார். சுவாரஸ்யமாக, டென் டோஸ்கேட் கே.கே.ஆரின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவரும் அபிஷேக் நாயரும் இந்திய அணியு டன் இலங்கை சுற்றுப்பயணத்தில் உதவி பயிற்சியாளர்களாக பயணிக்க வாய்ப்புள்ளது.
பீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப் தொடருகிறார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் குழுவில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஒரே நபராக அவர் உள்ளார். முந்தைய பயிற்சியாளர் குழுவில் இருந்த ஒருவர் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தொடர்வது புதிதல்ல. சஞ்சய் பங்கருக்குப் பதிலாக 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு விக்ரம் ரத்தோர் ரவி சாஸ்திரியின் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட்டின் பதவிக் காலம் வரை அவர் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“