இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய வீரரான அபிஷேக் சர்மா பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் மட்டும் தனி ஆளாக 21 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 53 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், அபிஷேக் சர்மா தனது 2-வது டி20 போட்டியிலே வேகமாக சதம் (46 பந்துகள்) விளாசிய மூன்றாவது வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம் விளாசிய முதல் வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார்.
அபிஷேக் சர்மா புகழாரம்
இந்த நிலையில், தனது சிறப்பான ஆட்டத்திற்கு அடித்தளமிட்ட யுவராஜ் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார் அபிஷேக் சர்மா. மேலும், 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்ற தன்னுடைய குரு யுவராஜ் சிங்கின் ஆசையை இன்று நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அபிஷேக் சர்மா பேசுகையில், "பயிற்சியின் போது கவனம் மிகவும் தெளிவாக இருந்தது. யுவி பாஜி இந்த விஷயங்களை எல்லாம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் நிறுத்தினார். யுவி பாஜி தான் என்னை நம்பினார். அவர் போன்ற ஒருவர் நீங்கள் நாட்டிற்காக விளையாடப் போகிறீர்கள், நீங்கள் கேம்களில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்று சொன்னால், 'சரி நான் இந்தியாவுக்காக விளையாடுவேன்' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்னால் முடிந்ததைச் செய்வேன்.
அவர்கள் (யுவராஜ் மற்றும் பஞ்சாப் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர்) எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், அவர்கள் அதை தொடர்ந்து செய்யப் போகிறார்கள். ஆனால் நான் முன்பே கூறியது போல், எல்லாவற்றுக்கும் அவர் (யுவராஜ்) தான் காரணம்.
கடந்த காலங்களில் அவர் (யுவராஜ்) என்னை நடத்திய விதம் மற்றும் ஒவ்வொரு இன்னிங்ஸின் போதும் அவர் எனக்கு எப்போதும் துணையாக இருந்துள்ளார். நான் எப்பொழுதும் கேட்கும் ஒரு பையன் அவர் தான், என்னை விட என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் நான் நம்புகிறேன்.
இந்தத் தொடருக்கு முன் சில போட்டிகளில் நான் சிறப்பாகச் செயல்படவில்லை, உங்கள் கேப்டனும் பயிற்சியாளரும் 'நீங்கள் இப்படித்தான் விளையாட வேண்டும், நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்' என்று உங்கள் கேப்டனும் பயிற்சியாளரும் கூறும்போது, ஒரு இளைஞனாக, அதாவது. மிகப்பெரிய உந்துதல், நான் கூறுவேன்.
தென் ஆப்பிரிக்காவில், ஹர்திக் பாண்டியா பாஜி மற்றும் சூரியகுமார் யாதவ் பாஜி ஆகியோர் என்னிடம் 100 சதவீதம் ரன்கள் எடுப்பீர்கள், ஆனால் உங்களை மட்டும் நம்புங்கள் என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இந்த தொடரில், கவுதம் கம்பீர் பாஜி மற்றும் சூரியா பாஜி மீண்டும் அதைக் கூறி நினைப்படுத்தினார்கள். அவர்கள் என்னை நம்பியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். எந்த வீரருக்கும் இது சாதாரணமானது அல்ல, ஏனெனில் இதுவே எந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் நான் சொல்லும் மிகப்பெரிய ஊக்கம்.
நான் நிறைய சமயங்களில் பயிற்சி செய்தேன். ஆனால் என் மனதில் ஒரு விஷயம் இருந்தது, பிரையன் லாரா ஒருமுறை என்னிடம், 'உங்கள் ஷாட்களை விளையாடுங்கள், ஆனால் நீங்கள் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார். நான் எந்த பந்துவீச்சாளரிடமும் வெளியேறாமல் கவனமாக இருந்தேன். இந்த சில ஆண்டுகளில் அது எனக்கு மிகவும் உதவியது
140 - 150 கிலோமீட்டர் வேகத்தில் எதிரணி பவுலிங் செய்யும்போது நீங்கள் எதற்கும் பின்வாங்காமல் தயாராக இருக்க வேண்டும். நான் பந்தை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் என்னுடைய ஷாட்டுகளை அடிக்க விரும்பினேன். ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை கவர்ஸ் திசைக்கு மேலே சிக்சர் அடிப்பது மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ரஷித்துக்கு எதிராக அடிக்க சிக்சர்களும் ஸ்பெஷலானது. நேராக அடித்ததையும் மறக்கவில்லை.
அது நேற்று யுவராஜ் பாஜி குறிப்பிட்ட ஒரு ஷாட். இதற்குப் பின் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் எப்போதும் நான் 15 - 20 ஓவர்கள் வரை விளையாடுவதை விரும்புகிறார். கம்பீர் பாஜியும் நான் இதை செய்வதையே விரும்பினார். எனவே இது என்னுடைய நாள் என்று நினைத்து அதில் என்னுடைய திட்டங்களை செயல்படுத்தினேன்" என்று கூறினார்.