scorecardresearch

4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம்; ரியல் சாம்பியன் அஜித்; திருச்சி துப்பாக்கி சுடுதலில் அசத்தல் வெற்றி

மூன்று பேர் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் அஜித் அணி பதக்கங்களை வென்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

47-வது மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டி திருச்சி மாநகர கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் கடந்த 24-ம் முதல் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 27-ம் தேதி நடிகர் அஜித் மாஸ்டர் பிரிவில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் பங்கேற்றார்.

அனைத்து போட்டிகளையும் முடித்த நடிகர் அஜித்குமார் அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதில் நடிகர் அஜித் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி மற்றும்  ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி,  ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி என 4 பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளது.

மேலும் 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி மற்றும் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி என இரண்டு பிரிவுகளில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் அஜித் 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். இவரது அணியில் மூன்று பேர் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் புள்ளிகள் அடிப்படையில்  அஜித் அணி பதக்கங்களை வென்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31.07.2022) நடைபெற உள்ளது. பரிசளிப்பு விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா, என்பது உறுதி செய்யப்படாத நிலையில், நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் கட்டாயம் ஒரு செல்பி எடுக்க வேண்டும்  என்ற ஏக்கத்தில் எதிர்பார்ப்பு கலந்த தவிப்புடன் அவரது ரசிகர், ரசிகைகள்  காத்துக் கொண்டிருக்கின்றனர். 

க. சண்முகவடிவேல் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Actor ajith team win 6 medels in 47th state level shooting competition