Ridhima Pandit | Shubman Gill: இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரராக களமாடி வருபவர் சுப்மன் கில். தனது அதிரடி தொடக்க ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தற்போது 3 ஃபார்மெட்டுகளிலும் விளையாடி வரும் அவர், 25 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1492 ரன்களை எடுத்துள்ளார்.
44 ஒருநாள் போட்டிகளில் 6 சதம், 13 அரைசதங்களுடன் 2271 ரன்களையும், 14 டி-20 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 335 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய கில், 12 போட்டிகளில் 426 ரன்களை எடுத்தார். நாளை (ஜூன் 2) முதல் அமெரிக்காவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் காத்திருப்பு வீரராக இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சின்னத்திரை நடிகை ரிதிமா பண்டிட்டை கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடக்கலாம் என்றும், அவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது. அதனால் அவர்கள் தங்களின் திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும், அவர்கள் திருமணத்தில் மீடியா கவரேஜ் எதுவும் அனுமதிக்கப்படாது எனவும் குறிப்பிட்டு பத்திக்கை ஒன்றில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ரித்திமா பண்டிட், தான் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக ரித்திமா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில், "அனைவருக்கும் காலை வணக்கம், பத்திரிகையாளர்களின் சரமாரியான போன் கால் தான் என்னை எழுப்பியது. எனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தான் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது யாருடன்? அது நடக்க போவதில்லை. உங்களுடைய நாளை இனிமையாக துவங்குங்கள். அப்படி ஏதாவது நடப்பதாக இருந்தால் நான் உங்களுக்கு தெரிவிப்பேன்" என்று விளக்கம் கொடுத்தார்.
சின்னத்திரை நடிகையான ரிதிமா பண்டிட், பஹு ஹமாரி ரஜினிகாந்த் மற்றும் கத்ரா கத்ரா கத்ரா போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு பெயர் பெற்றவர். பிக் பாஸ் ஓ.டி.டி-யின் முதல் சீசனிலும் அவர் பங்கேற்று இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோருடன் சுப்மன் கில் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“