/indian-express-tamil/media/media_files/2025/02/21/YbhWKMSb0lmqM5C4xwjN.jpg)
ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, சாம்பியன்ஸ் டிராபி 2025, லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் தொடங்கி நடைபெறும் 3-வது போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் - ஆப்கான் பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், தென் ஆப்ரிக்க அணியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் - டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் டோனி டி ஜோர்ஜி 11 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த கேப்டன் டெம்பா பவுமா தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டனுடன் சிறப்பான ஜோடியை அமைத்தார்.
இதில் அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே, களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த ரியான் ரிக்கெல்டன் 48 பந்துகளில் அரைசதம் விளாசினார். கேப்டன் டெம்பா பவுமாவுக்குப் பின் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் அரைசதம் விளாசினார். இதேபோல், அவருடன் ஜோடி அமைத்திருந்த தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சதம் விளாசி அசத்தினார். இருவரும் சிறப்பான ஜோடியை கட்டமைத்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தி வந்த நிலையில், தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 106 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 103 எடுத்து ரன் அவுட் ஆகினார்.
அவருடன் ஜோடி அமைத்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 14 ரன்னுக்கும், மார்கோ ஜான்சன் டக்-அவுட் ஆகியும் வெளியேறினர். களத்தில் இருந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்கள் எடுத்தார். அவருடன் இருந்த வியான் முல்டர் 12 ரன் எடுத்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தான் பேட்டிங்
இதனையடுத்து, 316 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன்னுக்கும், இப்ராஹிம் சத்ரான் 17 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களத்தில் இருந்த செடிகுல்லா அடல் - ரஹ்மத் ஷா ஜோடியில், செடிகுல்லா 16 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
ரஹ்மத் ஷா மட்டும் களத்தில் தனி ஒருவனாக ரன்களை சேர்க்க, மறுமுனையில் களமாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் (18 ரன்), முகமது நபி (8 ரன்), குல்பாடின் நைப் (13 ரன்), ரஷீத் கான் (18), நூர் அகமது (9 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அரைசதம் விளாசி 90 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா ஆட்டமிழக்கவே ஆப்கானிஸ்தானின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி ஆப்கானிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்க அணி தரப்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 3 விக்கெட்டையும், லுங்கி என்கிடி, வியான் முல்டர் தலா 2 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சதம் விளாசி மிரட்டிய தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
நாளை சனிக்கிழமை லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றும் 4வது போட்டியில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள்:
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது
தென் ஆப்பிரிக்கா: ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Afghanistan vs South Africa LIVE Cricket Score, Champions Trophy 2025
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று வியாழக்கிழமை துபாயில் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.