விராட் கோலியை விட நான் அதிக தூரம் சிக்ஸ் அடிக்கும் போது ஏன் அவரைப் போல டயட்டில் இருக்கணும்?

பிறகு, ஏன் நான் விராட் கோலியைப் போன்று கடுமையான டயட்டில் இருக்க வேண்டும்?.

ஆசைத் தம்பி

இன்றைய கிரிக்கெட் உலகில் அதிக எடை கொண்ட சர்வதேச வீரர் யார் என்றால், அது  ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் மொஹம்மத் ஷாசத் தான். 90 கிலோ. முதன் முதலாக இவரை பார்த்த பொழுது, ‘இந்த உடம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி விளையாடுவார், ஓடுவார்?’ என்று நினைத்தால், ஆப்கானிஸ்தான் அணியின் டி வில்லியர்ஸ் எனும் செல்லப் பெயரை சம்பாதித்து சாதித்து இருக்கிறார் இவர். அதிரடியான ஆட்டம், துடிப்பான கீப்பிங் என தனது எடையை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், களத்தில் அதகளம் செய்து வருகிறார். ஆனாலும், அவரது எடை அவ்வப்போது அவரை களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சோர்வாக்கி விடுகிறது. இதனால், தன் உடலை குறைப்பதற்காக சில உடற்பயிற்சிகளை ஷாசத் மேற்கொண்டு வருகிறார். ஆனால், சாப்பாடு விஷயத்தில் என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என குழந்தைத் தனமாக கூறும் ஷாசத், நான் ஏன் விராட் கோலி மாதிரி ஃபிட்டாக இருக்கணும்? என்று கேள்வியும் எழுப்புகிறார். இதுகுறித்து அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ…..

“நான் குண்டாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். உடலை குறைக்கச் சொல்லி அட்வைஸ் செய்கிறார்கள். நானும் எனது உடலை ஃபிட்டாக்க நிறைய பயிற்சிகள் எடுத்து வருகிறேன். ஆனால், உணவை பொறுத்தவரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உணவில் சமரசம் செய்து கொள்ளவும் எனக்கு விருப்பம் இல்லை. இந்திய கேப்டன் விராட் கோலியைப் போன்று ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைத்தால், அது என்னால் முடியாது. ஆனால், எனது உடல் எடையை குறைக்க முயற்சித்து வருகிறேன்.

எல்லோரும் விராட் கோலி ஆகிவிட முடியாது. ஆனால், என்னால் விராட் கோலியை விட அதிக தூரத்திற்கு சிக்ஸர்களை பறக்கவிட முடியும். பிறகு, ஏன் நான் விராட் கோலியைப் போன்று கடுமையான டயட்டில் இருக்க வேண்டும்?. எங்களது கோச் ஃபில் சிம்மன்ஸ்க்கு தெரியும், என்னால் முழுமையாக 50 ஓவர்கள் களத்தில் நின்று, சிறப்பாக விளையாட முடியும் என்று!.

இந்திய கிரிக்கெட் அணியில் எனது நெருங்கிய தோழர் என்றால், அது மகேந்திர சிங் தோனி தான். ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரும் எனக்கு நல்ல நண்பர்களே. (ஷிகர் தவானை ‘ஷேகர் தவன்’ என்றே ஷாசத்  சொல்கிறார்).

“தோனியைப் போல் ஹெலிகாப்டர் ஷாட்களை ஆட முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு எதிராக 3-4 முறை விளையாடியுள்ளேன். மேட்ச் முடிந்த பிறகு தோனியின் அறையில் மணிக்கணக்காக நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். தோனியை போன்று சில சமயம் ஹெலிகாப்டர் ஷாட்கள் ஆடுவதால், நான் இந்தியாவிலும் சில ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளேன்.

தோனி என்னிடம் ஆப்கனில் என்ன நடக்கிறது, என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் ஆர்வமாக கேட்பார். அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காக திறந்திருக்கும். ஆனா பாருங்க, அவரது மொபைல் எண்ணில் அவரைப் பிடிக்கவே முடியாது. கிடைக்கவே மாட்டார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின், முதன்முறையாக வரும் ஜூன் மாதம் இந்திய அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறோம். அதுதான் வரலாற்றில் எங்களது முதல் டெஸ்ட் போட்டி. அப்படிப்பட்ட வரலாற்று டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நாங்கள் ஆடும்போது விராட் கோலி இல்லாமல் போனால் அது வருத்தமான விஷயம் தான். அவர், அந்த சமயத்தில் இங்கிலாந்து கவுண்டி கிளப் அணிக்கு ஆடப் போவதாக சொல்கிறார்கள்.  ஆனால் அவர் இல்லாவிட்டால் இந்திய பேட்டிங்குக்கு தான் பிரச்சினை. எங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவர் விளையாடுவதைப் பார்க்க எங்களுக்குப் பிடிக்கும். அவரை நாங்கள் நேசிக்கிறோம்.

பாலிவுட் சினிமாவில் அஜய் தேவ்கன் மற்றும் ஷாருக்கான எனக்கு பிடித்தமான நடிகர்கள். நிறைய பாலிவுட் படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன்.

என் குடும்பத்தினர் பெயர்களைக் கூற வேண்டுமெனில் ஒரு இரவு முழுதும் ஆகும். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் குடும்பம் பெரியது. கிரிக்கெட் இல்லாத தருணங்களில் அவர்களுடன் நேரம் செலவிடுவது தான் எனது பொழுதுபோக்கு” என்றார் ஷாசத்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close