வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களும், வங்கதேசம் 205 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, வங்கதேசத்துக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சர்வதேச டெஸ்ட் தொடரில் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கன் அணியின் கேப்டன் ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி, இப்போட்டியில் பல சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் வெற்றியை பதிவு செய்த கேப்டன் எனும் பெருமையை ரஷித் கான் பெறுகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 50+ ரன்களும் 10க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
10 வெவ்வேறு நாடுகளிடமும் டெஸ்ட் போட்டிகளில் தோற்ற ஒரே அணி வங்கதேசம் தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனான முதல் போட்டியிலேயே, இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் மற்றும் 50 ரன்களும் கைப்பற்றிய நான்காவது கிரிக்கெட் வீரராகிறார் ரஷித் கான்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஷெல்டன் ஜாக்சன்(1905), பாகிஸ்தானின் இம்ரான் கான்(1982), வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல்ஹசன்(2009) ஆகியோர் இதே சாதனையை இதற்கு முன்பு படைத்துள்ளனர்.
மிக இளம் வயதில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு 5 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்கள் எடுத்த ஒரே கேப்டன் எனும் பெருமையையும் ரஷித்கான் பெறுகிறார். 20 வயது 352 நாட்களில் இச்சாதனையை ரஷித் படைத்திருக்கிறார். முன்னதாக, 22 வயது 115 நாள் கொண்ட ஷகிப் வசம் இச்சாதனை இருந்தது.
ஆப்கானிஸ்தான் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம், விரைவில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த அணிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.
ரஹ்மத் ஷா 102 ரன்கள் அடித்தது மூலம், டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த முதல் ஆப்கன் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மிகக் குறைந்த போட்டியில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த அணிகள்:
3 ஆஸ்திரேலியா
3 ஆப்கானிஸ்தான்
4 இங்கிலாந்து
9 பாகிஸ்தான்
12 வெஸ்ட் இண்டீஸ்
13 தென்னாப்பிரிக்கா
20 இலங்கை
30 இந்தியா
31 ஜிம்பாப்வே
55 நியூசிலாந்து
60 வங்கதேசம்