worldcup 2023 | pakistan-vs-afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 283 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 49 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.
அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களும் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ரஹ்மத் ஷா 77 ரன்களும், கேப்டன் ஹெஷ்மத்துல்லா ஷாஹிதி 48 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் (-0.969) அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி 3ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. -0.400 நெட் ரன்ரேட்டுடன் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது.
மகிழ்ச்சி வெள்ளத்தில் உற்சாகம்
இந்நிலையில், பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் அணியினர் தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். நேற்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு எழுந்து நின்று கைகளை தட்டியும், ஆரவாரம் செய்தும் பாராட்டு மழை பொழிந்தனர். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது அணியிருடன் ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு உற்சாகமாக மைதானத்தை சுற்றி வந்தனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இணைந்து நடனமாடி வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை விமான நிலையம் செல்லும் போது பேருந்திலே லுங்கி டான்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் அணியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக இலங்கையை வருகிற 30 ஆம் தேதி அன்று புனேவில் வைத்து எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக அந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் அணி பேருந்தில் விமான நிலையம் சென்றனர். அவர்கள் விமான நிலையம் செல்லும் வழியில் பேருந்து உள்ளே இருந்து கொண்டே லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“