Paddy Upton – indian cricket team – BCCI Tamil News: 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது. இந்த தொடருக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி உத்தரவிட்டது. அதன்படி, ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக தேர்வுக்குழுவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், செய்யலாம் என்றும் அறிவிப்பை வெளியிட்டது. இதேபோல், ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யாவை டி20 கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
பயிற்சியாளர்கள் குழுவில் கைவைத்த பிசிசிஐ
இந்நிலையில், தேர்வு குழுவை தொடர்ந்து பயிற்சியாளர்கள் குழுவிலும் பிசிசிஐ கைவைத்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் வீரர்கள் மனநல மேம்பாட்டு பயிற்சியாளரான பேடி அப்டன் இனி அந்த பதவில் தொடரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவுக்கு வந்த நிலையில், அவரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்ற ஆலோசனை நடந்த போது, தேவையில்லை, அவர் செல்லட்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடி அப்டன், 2 ஆண்டுகளுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்து வந்த விராட் கோலியை தனது பயிற்சியால் தரமான கம்பேக் கொடுக்க வைத்தார். அதுமட்டுமில்லாமல் தொடக்க வீரர் கே.எல்.ராகுலும் தற்போது அவரிடம் தான் தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவரின் உதவி இனி இந்திய அணிக்கு இருக்காது என்று தெரியவந்துள்ளது.
சீனியர் வீரர்கள் பக்கம் திரும்பும் பிசிசிஐ பார்வை

இந்தியாவின் படுதோல்விக்கு பதில் சொல்லும் விதமாக தேர்வுக்குழு, பயிற்சியாளர் என்று கைவைத்த பிசிசிஐ, அடுத்ததாக அதன் பார்வையை சீனியர் வீரர்கள் பக்கம் திருப்பியுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற கூறிவிட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே விளையாட அறிவுறுத்தும் எண்ணத்தில் உள்ளது. தொடர்ந்து, ஒரு இளம் இந்திய டி20 அணியை உருவாக்கும் திட்டத்திலும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil