பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேனாக ஆடிய வருபவர் அகமது ஷெசாத். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு அணிக்காக ஆடி வரும் இவர், இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் 40.92 சராசரியில் 982 ரன்களும், 81 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 32.56 சராசரியில் 2605 ரன்களும், 59 டி20-களில் 25.81 சராசரியில் 1471 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அகமது ஷெசாத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ள அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், வீரர்களுக்கு தவறான வாக்குறுதிகள் மற்றும் அநீதி இழப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Fresh controversy in Pakistan cricket: Ahmed Shehzad withdraws from Champions Cup due to PCB ‘favoritism’
இது தொடர்பாக 32 வயதான அகமது ஷெசாத் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கனத்த இதயத்துடன், உள்நாட்டு கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) விருப்பு வெறுப்பு, பொய்யான வாக்குறுதிகள் மற்றும் உள்நாட்டு வீரர்களுக்கு அநீதி இழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பணவீக்கம், வறுமை மற்றும் பாரிய மின்சாரக் கட்டணங்களினால் பாகிஸ்தான் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எதுவும் செய்யாமல், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஆல் டைம் குறைந்த நிலைக்குக் கொண்டு வந்த தற்போதைய அணியில் தோல்வியுற்ற வீரர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக, வழிகாட்டிகளுக்கு 5 மில்லியன் ரூபாயை பி.சி.பி வீணடிக்கிறது.
பிசிபி தங்களிடம் ‘அறுவை சிகிச்சைக்கான கருவிகள்’ இல்லை என்று கூறுவது இன்னும் அவமரியாதையானது. இது உள்நாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய அவமரியாதை. ஒரு பாகிஸ்தானியனாகவும், உண்மையான கிரிக்கெட் காதலனாகவும், தகுதிக்கு மதிப்பில்லாத அமைப்பை என்னால் ஆதரிக்க முடியாது. தோல்வியுற்ற இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க நான் மறுக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அகமது ஷெசாத் கடுமையாக தாக்கிப் பேசுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் முன்கூட்டியே வெளியேறிய போது அவர் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு நாட்டின் நலன்களை விட தனிப்பட்ட மைல்கற்களை நோக்கி ஆடிய பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான் மற்றும் ஹரிஸ் ரவுஃப் போன்ற வீரர்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை
சாம்பியன்ஸ் கோப்பை என்பது பாகிஸ்தானின் உள்நாட்டு காலாண்டரில் "உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்காக" அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய போட்டியாகும். இந்தத் தொடர் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டியானது 50 ஓவர், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மெட்டுகளிலும் நடைபெறுகிறது.
மிஸ்பா-உல்-ஹக், சக்லைன் முஷ்டாக், சர்ஃபராஸ் அகமது, ஷோயப் மாலிக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய 5 முன்னாள் வீரர்கள் டால்பின்ஸ், லயன்ஸ், பாந்தர்ஸ், ஸ்டாலியன்ஸ் மற்றும் வுல்வ்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்கு வழிகாட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“