45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில்இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: AICF announces cash reward for Olympiad winners
தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏ.ஐ.சி.எஃப்) ரூ.3.2 கோடியை வெகுமதியாக அறிவித்துள்ளது என்று ஏ.ஐ.சி.எஃப் தலைவர் நிதின் நரங் இன்று புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற அணிகளில் இருந்து ஒவ்வொரு வீரருக்கும் ரூ.25 லட்சமும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இந்தியக் குழுவின் தலைவரான கிராண்ட்மாஸ்டர் திபியேந்து பருவா ரூ.10 லட்சமும், உதவிப் பயிற்சியாளர்களுக்கு ரூ.7.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராட்டு விழாவின் போது பேசிய ஏ.ஐ.சி.எஃப் தலைவர் நிதின் நரங், "தங்கத்திற்கான தேடல் ஹங்கேரியில் முடிந்தது, ஆனால் வெற்றிக்கான ஆசை தொடர்கிறது. ஓபன் பிரிவில் நாம் ஆதிக்கம் செலுத்தினோம், பெண்கள் பிரிவில் நாம் அதை அப்படியே வைத்திருந்தோம்." என்று கூறினார்.
ஏஐசிஎஃப் பொதுச் செயலாளர் தேவ் ஏ படேல் பேசுகையில், "நமது வீரர்கள் சதுரங்கப் பலகையில் ஷார்ப் ஷூட்டர்கள். விஸ்வநாதன் ஆனந்த் போட்ட விதைகள் காடாக வளர்ந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை தங்கப் பதக்கங்கள் நாட்டில் சதுரங்கப் புரட்சியை ஏற்படுத்த உதவும். 97 வருட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளோம். இது ஒரு வரலாற்று சாதனை. இது செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு புதிய தீப்பொறியைக் கொடுக்கும். அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை ஊக்குவிக்க இந்த வேகத்தை பயன்படுத்துவோம்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“