/indian-express-tamil/media/media_files/2025/10/24/indian-women-kabaddi-2025-10-24-16-57-13.jpg)
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில், முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியை பெற்று பதக்கத்தை வென்றுள்ளது.
இந்த போட்டித் தொடரில், தொடக்கத்தில் இருந்தே, இந்திய அணி தனி ஒரு பிரிவாகத் தெரிந்தது. வங்காளதேசத்திற்கு எதிரான 46–18 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த தொடரின் இந்தியாவின் பயணம் தொடங்கியது. இது, அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் நிறைந்த ஒரு கடுமையான ஆட்டத்திற்கு அடித்தளமிட்டது. அடுத்து தாய்லாந்து அணிக்கு எதிராக, இந்திய அணி ஆட்டத்தின் தீவிரத்தை அதிகரித்து 70–23 என்ற கணக்கில் பெரிய வெற்றியை பெற்றது. இந்திய அணியின் தாக்குதல் திறன் மற்றும் துல்லியமான தற்காப்பு ஆகியவை பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
அடுத்து நடைபெற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்ற, இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும் அணியாகத் தன்னை வலிமையாக நிலைநிறுத்திக் கொண்டது. அடுது்து இலங்கை அணிக்கு எதிராக போட்டியில், 73–10 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இதன் மூலம் இந்த தொடரில், அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றிகளில் ஒன்றாக பதிவு செய்தது. இதில், இந்தியாவின் ஒவ்வொரு ரெய்டர் மற்றும் தடுப்பாட்ட வீரரும் பங்களித்தனர். ஈரானுக்கு எதிராக 59–26 என்ற மற்றொரு தீர்க்கமான வெற்றியுடன் முடிந்தது. இந்த ஆட்டமே, இறுதிப் போட்டி எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக அமைந்தது.
தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில், இந்தியாவும் ஈரானும் மீண்டும் மோதியபோது, அதன் ஆதிக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என ஒரு சிலரே எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி, தொடக்கத்திலேயே விரைவான ரெய்டுகள் மற்றும் வெற்றிகரமான பிடிகள் மூலம் புள்ளிகளைக் குவித்து, ஈரானை ஆரம்பத்திலேயே தடுமாற வைத்தது. இந்தியாவின் ரெய்டிங் பிரிவினர் வேகம் மற்றும் துல்லியத்தை இணைத்து, எதிரணியின் கட்டுப்பாட்தை தகர்த்து புள்ளிகளை குவித்தது.
முதல் பாதி முடிவதற்குள்ளேயே, இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை உருவாக்கியது. அடுத்து இரண்டாவது பாதியிலும் அவர்களின் கட்டுப்பாடு மேலும் வலுவடைந்தது. ஈரான் அணி மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தது, ஆனால் இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால், ஈரானால் முன்னேறி செல்ல முடியவில்லை. இறுதி விசில் ஒலித்தபோது, ஸ்கோர்போர்டு 75–21 என்று நின்றது. இந்த மிகப் பெரிய வித்தியாசம்தான் இரு அணிகளுக்கும் இடையிலான தரமான வேறுபாட்டைச் சரியாகப் பிரதிபலித்தது.
இந்த வெற்றியானது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி என்றாலும், பல வீரர்கள் இத்தொடர் முழுவதும் தனித்துத் தெரிந்தனர். அந்த வரிசையில், சென்னை கண்ணகி நகர் பகுதியில் இருந்து இந்திய மகளிர் கபடி அணியில் விளையாடிய கார்த்திகா என்ற பெண் சிறப்பாக விளையாடி தங்கம் வென்றுள்ளார். இதுதான் நான் விளையாடி வாங்கிய முதல் மெடல். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. கண்ணகி நகரில் இருந்து மெடல் வாங்கி இருப்பதால் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மகளிர் அணியை போல் இந்திய ஆண்கள் அணியும் இறுதிப்போட்டியில், ஈரானை 35–32 என்ற வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதால், கபடியில் இந்தியாவுக்கு இரட்டைத் தங்கமாக அமைந்தது. பதக்க விழாவின் போது மூவர்ணக் கொடி உயர்ந்து பறந்தபோது, அந்தத் தருணம் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கபடி ரசிகர்களுக்கு ஆழமான பொருள் கொண்டது. பலர் தங்கள் முதல் சர்வதேச இறுதிப் போட்டியில் விளையாடிய அந்த இளம் பெண்கள், ஒரு பட்டத்தை வென்றது மட்டுமல்லாமல், இந்திய கபடியின் எதிர்காலம் தாங்கள்தான் என்றும் அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us