புனேவில் உள்ள கோல்ஹாபூர் பகுதியில், இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்க்யா ரஹானே தந்தை ஓட்டிவந்த கார் வயதான பெண்மணி ஒருவர் மீது மோதியதில் அப்பெண் உயிரிழந்தார், இதனையடுத்து ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை (54) போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (வெள்ளி) காலை புனே-பெங்களூரு தெசிய நெடுஞ்சாலையில் காகல் தாலுக்கில் இந்த விபத்து நடந்துள்ளது.
போலீஸார் தரப்பின் படி, ரஹானே குடும்பத்தினர் கடற்கரை சுற்றுலா கிராமமான தர்கர்லிக்கு கோல்ஹாபூர் வழியாகச் சென்றனர். காரை ஓட்டிச் சென்ற கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே, காரை வேகமாக செலுத்தியதால் ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண்மணி மீது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
உள்ளூர்வாசிகள் உடனடியாக விபத்தில் காயமடைந்த அந்தப் பெண்மணியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர், ஆனால் அங்கு காயத்தின் தீவிரம் காரணமாக அவர் மரணமடைந்தார். அந்தப் பெண்மணியின் பெயர் ஆஷா காம்ப்லே, இவருக்கு வயது 67.
இதனையடுத்து, காகல் போலீஸ் நிலையத்தில், அலட்சியத்தினால் மரணம் ஏற்பட்டது தொடர்பான சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு ரஹானேயின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே கைது செய்யப்பட்டுள்ளார்.