இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் களமாடுவார்கள்.
இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கைக்கு இன்று (திங்கள்கிழமை) புறப்பட்டது. முன்னதாக, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவை இந்திய டி20 கேப்டனாக தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பேசினார்.
இது தொடர்பாக அஜித் அகர்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கேப்டன் பொறுப்புக்கு சூரியகுமார் முற்றிலும் தகுதியான நபர்களில் ஒருவர். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது. அவர் உலகின் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர்.
அவரிடம் ஒரு நல்ல கேப்டனாக இருப்பதற்கு தேவையான அனைத்து குணங்களும் உள்ளதாக நாங்கள் உணர்கிறோம். எல்லா ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை நாங்கள் விரும்பினோம். அணியை வழிநடத்த தேவையான திறமை சூரியாவிடம் உள்ளது. எப்போதும் அணியில் இருக்கும் ஒரு கேப்டனை நாங்கள் விரும்பினோம். இன்னும் இரண்டு வருடத்தில் எப்படி இருப்பார் என்று பார்ப்போம்.
இந்த கட்டத்தில், சூரியா ஒரு டி20 வீரராக மட்டுமே பார்க்கப்படுகிறார். அவரை நாங்கள் ஒருநாள் போட்டிகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை." என்று கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்படுவார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகிறது.
இதுகுறித்து அஜித் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "ஹர்திக் இந்திய அணிக்கு முக்கியமான வீரர். அவர் அணியில் இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அவரிடம் அந்த திறன்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
உடற்தகுதி அவர் போராடும் ஒன்றாக இருக்கிறது. தேர்வாளர்களாக, அது உங்களை கடினமாகிவிடும். இன்னும் அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஒருவரை (கேப்டனாக) நாங்கள் விரும்புகிறோம் என்பதே அதன் பின்னால் உள்ள சிந்தனை.
ஹர்திக்கை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் உணர்கிறோம், உலகக் கோப்பையில் அவர் பேட் மற்றும் பந்தில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்தோம். ஒவ்வொரு வீரரின் பங்கும் மாறிவிட்டதா என்பதைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். ஆம், கேப்டன்சி பற்றி நாங்கள் அவரிடம் பேசினோம். ”என்று அவர் கூறினார்.
ஜடேஜா கழற்றி விடப்படவில்லை
டி20 உலக்கோப்பைக்குப் பின் இந்திய ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதனால், அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இது பற்றி தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பேசுகையில், ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
"ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்படவில்லை. டெஸ்ட் பணிச்சுமை விரைவில் வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்வுக்குப் பிறகு, 'இல்லை அவர் [ஜடேஜா] கைவிடப்படவில்லை' என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவர் விஷயங்களின் திட்டத்தில் முக்கிய வீரராக இருக்கிறார்." என்று அஜித் அகர்கர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.