அப்படின்னு நாம் கேள்வி கேட்கவில்லை... ரசிகர்கள் சமூக தளங்களில் இப்படி கேள்விக் கேட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், தோனி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கரின் சொன்ன சமீபத்திய கருத்துகளே.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் மேட்சை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அஜித் அகர்கர், "இந்த ஒருநாள் தொடரில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி களம் இறக்க வேண்டும். தோனியால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், இந்தத் தொடரில் அவர் ஆடாததால், அவருக்கு எந்த இழப்பும் வரப் போவதில்லை" என்று தெரிவித்து இருக்கிறார்.
இதுதான் ரசிகர்களின் கோப விவாதத்திற்கு காரணம்.
அகர்கர் சொன்னதில் என்ன தவறு?
தோனி மீது விமர்சனம் வைப்பது அகர்கருக்கு இது ஒன்றும் புதிதல்ல.. 3 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, தோனியின் பேட்டிங் குறித்து அகர்கர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கோச் கேரி கிறிஸ்டன், "தோனிக்கு மாற்றாக ஏதேனும் ஒரு வீரரை இந்திய அணி வைத்துள்ளதா? அவரை ரீபிளேஸ் செய்யும் வீரர் ஒருவரை கண்டறிந்து அதற்கு பிறகு தோனியை விமர்சிக்கலாம்" என பதிலடி கொடுத்திருந்தார்.
அதன்பிறகு, கடந்தாண்டு இந்தியாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20யின் போது, தோனியால் அணியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. அப்போதும் கருத்து தெரிவித்த அகர்கர், "டி20 போட்டியில் இந்தியாவுக்கு மாற்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தேவை. ஒருநாள் போட்டிக்கு தோனி ஆடுவது ஓகே. ஒரு கேப்டனாக தோனி அணியில் இருக்கலாம். ஆனால், பேட்ஸ்மேனாக அவர் இல்லையென்றால், இந்திய அணி அவரை பெரிதாக மிஸ் செய்யாது" என்றார்.
இதற்கும் ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'நீங்கள் இந்திய அணிக்கு என்ன செய்தீர்கள்?' என்ற ரீதியில் ரசிகர்கள் அவரது கருத்தை வசைபாடினர். இப்போது மீண்டும் அப்படி சிக்கியிருக்கிறார் அகர்கர்.
அகர்கள் சொன்னதில் ஏதும் தவறு உள்ளதா? என்று ஆராய்ந்தால், இல்லை என்று ஓப்பனாகவே சொல்லலாம்.
இப்போது இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய பலம் வாய்ந்த அணி என்று சொல்ல முடியாது. ஆகையால், தோனிக்கு இந்தத் தொடரில் பெரிய வேலை இருக்க வாய்ப்பில்லை. தவிர, தொடர் இந்தியாவில் நடக்கிறது. ஸோ, பேட்டிங்கில் இந்தியா சோடை போவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகையால், தோனிக்கு ஓய்வு அளித்துவிட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு அளிப்பதால், அகர்கர் சொல்வது போல் தோனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
எப்படியும் தோனி, ரிஷப் என்ற இவ்விரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள். தினேஷ் கார்த்திக்கிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், இளங்கன்று பயமறியாது என்பது போல தற்போது பேட்டிங்கில் அதிரடியாக 'சீறும்' ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அங்கே, இந்திய அணி அட்லீஸ்ட் அரையிறுதிக்காவது முன்னேற வேண்டும் என்றால், பண்ட் போன்ற பயமில்லாத அதிரடி பேட்ஸ்மேன் தேவை.
தோனிக்கு மாற்றாக உலகக் கோப்பை பென்ச்சில் பண்ட் உட்கார்ந்தால், அது இந்திய அணிக்கு தான் நல்லது. இன்னும் சொல்லப்போனால், தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால், ரிஷப் பண்ட்டை உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாக கூட இறக்கலாம்.
எனவே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் பண்ட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, சர்வதேச அனுபவத்தை அவருக்கு மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. மென்ட்டலாக அப்போதுதான் அவர் ஒரு ஷேப்பிற்கு வருவார்.
தோனியிடம் அந்த சர்வதேச அனுபவம் கொட்டிக் கிடக்கிறது. அதற்காகத் தான் அவருக்கு இப்போதும் முதல் மரியாதை. அதில் சந்தேகமேயில்லை.
இதனால், தோனி குறித்த அஜித் அகர்கரின் சமீபத்திய கருத்தை விமர்சிக்க எந்த முகாந்திரமும் இருப்பதாக தோன்றவில்லை.