India Vs England, 4th Test, Ranchi | Jasprit Bumrah: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்காக ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். "தொடரின் காலம் மற்றும் சமீப காலங்களில் அவர் விளையாடிய கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் கூறியுள்ளார்.
பும்ராவுக்கு பதில் ஆகாஷ் தீப்
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். 27 வயதான பெங்கால் ஆகாஷ் தீப் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணியில் விளையாடி வருகிறார். அவர் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டங்களில் பந்துவீசிய விதம், அணி நிர்வாகத்தையும் தேர்வாளர்களையும் ஈர்த்துள்ளது. அதனால் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இரண்டு பெங்கால் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆகாஷ் தீப்-க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை 30 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் 23.58 சராசரியுடன் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேநேரத்தில், விசாகப்பட்டியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் விளையாடிய முகேஷ் குமார் 12 ஓவர்கள் வீசினார். இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். அதுவும், நம்பர் 10 இடத்தில் பேட்டிங் செய்த சோயப் பஷீரின் விக்கெட்டை தான் அவர் கைப்பற்றினர். எனவே, அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப்-க்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Fast bowler Akash Deep likely to make Test debut at Ranchi
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“