இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. இரட்டை சதம் அடித்து மிரட்டிய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களும், ஜடேஜா 89 ரன்களும், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184 ரன்களும், ஹாரி புரூக் 158 ரன்னும் எடுத்தனர்.
பின்னர், 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 271 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
10 விக்கெட் - ஆகாஷ் தீப் அசத்தல்
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இந்த நிலையில், பலம் பொருந்திய இங்கிலாந்துக்கு எதிராக, தான் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்ததை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது அக்காவுக்கு சமர்ப்பிப்பதாக ஆகாஷ் தீப் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசுகையில், "எனது அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் நிலையாக இருக்கிறார். அவர் மனதளவில் கடந்து வந்த அனைத்திற்கும் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார், இந்த போட்டியை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
அவரது முகத்தில் ஒரு புன்னகையைப் பார்க்க விரும்புகிறேன். இந்த ஆட்டம் உங்களுக்கானது. நான் பந்தை எடுக்கும் போதெல்லாம், என் சகோதரியின் எண்ணங்கள் மட்டுமே என் மனதில் ஓடின. நான் உன்னுடன் இருக்கிறேன். உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறேன், நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.