News about Rahul Dravid, India and Allan Donald in tamil: கடந்த 1997 ஆம் ஆண்டில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் தென்ஆப்பிரிக்க மண்ணில் நடந்தது. இதன் இறுதிப்போட்டிக்கு இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறி இருந்தன. இப்போட்டியானது பிப்ரவரி 12 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், ஆட்ட நாளில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து போட்டி, மறுநாளான ரிசர்வ் நாளில் நடந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணியில் கேரி கிர்ஸ்டன் (51), டேரில் கல்லினன் (60), ஜான்டி ரோட்ஸ் (41), ஜாக் காலிஸ் (49) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராபின் சிங், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத் தலா 2 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் போது மீண்டும் மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 40 ஓவர்களில் 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா முத்தரப்பை கோப்பையை வென்றது.
டிராவிட்டை ஸ்லெட்ஜ் செய்த ஆலன் டொனால்ட்
இந்த ஆட்டத்தில் 234 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்தியா துரத்திய போது, தொடக்க வீரர் சவுரவ் கங்குலி தென்ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் பந்துவீச்சில் 5 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் – டிராவிட், புகழ்பெற்ற தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை முறியடித்தனர். இந்த ஜோடியில் குறிப்பாக, ஆக்ரோஷம் என்றால் என்னவென்று தெரியாத டிராவிட் ஷான் பொல்லாக், டொனால்ட், ரூடி பிரைசன் போன்ற வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அடித்து நொறுக்கினார்.

அப்போதுதான் ஆலன் டொனால்ட் டிராவிட்டை ஸ்லெட்ஜ் செய்தார். ஆனால், அவர் டிராவிட்டிடம் சரியாக என்ன சொன்னார் என்பது ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. அந்த சூட்டில் இருந்த ட்ராவிட் டொனால்ட் வீசிய ஒரு பந்தை லாங்-ஆனில் பெரிய சிக்ஸருக்கு அடித்து மிரட்டினார். இந்த ஆட்டத்தில் இந்திய தோல்வியைத் தழுவினாலும், 94 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 84 ரன்கள் எடுத்த டிராவிட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். அதேவேளையில், மின்னல் வேக பந்துவீச்சாளரான ஆலன் டொனால்ட் வங்கதேசத்தின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

25 வருடத்திற்குப் பிறகு டிராவிட்டிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பு
இந்நிலையில், 1997ல் டர்பனில் நடந்த அந்த கசப்பான சம்பவத்திற்காக ஆலன் டொனால்ட் டிராவிட்டிடம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அவரை இரவு உணவிற்கு தன்னுடன் அமர்ந்து உண்ணவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா – வங்கதேச டெஸ்ட் தொடரை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் ஆலன் டொனால்ட், “டர்பனில் நான் பேச விரும்பாத ஒரு அசிங்கமான சம்பவம் நடந்தது. அவரும் (ராகுல் டிராவிட்டும்) சச்சினும் எங்களின் பந்துவீச்சை எல்லாப் பகுதிகளிலும் அடித்தனர். நான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறினேன்.
ராகுல் மீது எனக்கு பெரிய மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இன்று நான் வெளியே சென்று ராகுலுடன் உட்கார்ந்து, அன்று என்ன நடந்தது என்று அவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். உண்மையில் அவரது விக்கெட்டை வீழ்த்த முட்டாள்தனமான ஒன்றை நான் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று நான் சொன்னதற்கு இன்னும் மன்னிப்பு கேட்கிறேன். என்ன ஒரு மிகப்பெரிய வீரர். எனவே, ராகுல், நீங்கள் இதை கேட்கிறீர்கள் என்றால், நான் உங்களுடன் ஒரு இரவில் டின்னர் (இரவு உணவு) சாப்பிட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
டிராவிட் கொடுத்த சுவாரசிய பதில்
மற்றொரு தனி பேட்டியில் டொனால்டின் கூறியது டிராவிட்டிடம் காட்டப்பட்டது. டொனால்டின் அழைப்பிற்கு பதிலளிக்குமாறு அவர் கேட்கப்பட்டார். அதற்கு அந்த புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஒரு உன்னதமான பதிலைக் கொடுத்தார். “நிச்சயமாக, நான் அதை எதிர்நோக்குகிறேன், குறிப்பாக அவர் பணம் செலுத்துகிறார் என்றால்,” என்று கூறி புன்னகையை தவழ விட்டார் டிராவிட்.

தென்ஆப்ரிக்க வேகப் புயல்களில் ஒருவரான ஆலன் டொனால்ட் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். அவர் விளையாடிய நாட்களில் பேட்ஸ்மேன்கள் மிகவும் பயந்த வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவரின் துல்லியமான மற்றும் அச்சுறுத்தும் வேகம். இரண்டாவது அவரின் வாய்ச் சண்டை. இவை இரண்டிற்கும் பயந்த வீரர்கள் அவரிடம் வம்பிழுக்க தயங்கினர். ஆனால், டிராவிட் அவருக்கு தனது மட்டை சுழற்றாலால் பதில் கொடுத்தார்.

இருப்பினும், ஆலன் டொனால்ட் அன்றிரவு தனது நடத்தைக்காக வருத்தம் தெரிவிப்பது இது முதல் முறையல்ல . ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில், போட்டிக்குப் பிறகு டிராவிட்டிடம் பேசி மன்னிப்பு கேட்க விரும்பியதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இந்திய அணி மிகவும் கோபமடைந்தது. தற்போது, இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களும் அந்த சம்பவத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil