சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி இன்று தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருபவர் அம்பதி ராயுடு. 2018 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த அம்பதி ராயுடு, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவருக்கென்று இந்திய அணியில் தனி இடம் கிடைத்தது.
தற்போது, இந்திய அணி விளையாடும் அனைத்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தவிர்க்க முடியாத வீரராக இடம் பிடித்து வருகிறார். பகுதி நேர வீச்சாளராகவும் பணியாற்றும் இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.
அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.
ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடை விதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.
நியூசிலாந்திற்கு எதிராக இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், சிறப்பாக விளையாடி, கடைசி வரை களத்தில் நின்று 40 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு பங்காற்றிய அம்பதி ராயுடு, இனி சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - 10 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா!