Cricket news in tamil: ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்த 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய இந்தியா, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடமும், இலங்கையிடமும் அடுத்தடுத்த தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க அந்த அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும், பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா கண்ட தோல்வியால் இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும், நடப்பு ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணி நிர்வாகத்திற்கு மட்டுமல்லாது, இந்திய ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தொடரில் கோலி 2 அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து, தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், கோலி 5 போட்டிகளில் 92 சராசரி மற்றும் 147.59 ஸ்ட்ரைக் ரேட்டில் 286 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட்டும், சராசரியும் போட்டியின் இறுதியில் அதிக ஸ்கோரைக் குவித்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. நடப்பு தொடரில் முன்னணி ரன் ஸ்கோரராக உருவெடுத்த முகமது ரிஸ்வான், 6 போட்டிகளில் சராசரியாக 56 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகவும் பெற்று இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் கோலியை விட குறைவு என்பதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார்.
சாகித் அப்ரிடி கருத்து
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி, விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என்கிற சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக தனியார்தொலலைக்காட்சி ஒன்றுக்கு அப்ரிடி அளித்த பேட்டியில், “விராட் கோலி ஃபார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர்.
விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார். அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார் என்று உணர்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அப்ரிடிக்கு பதிலடி… மிஸ்ராவின் ட்வீட்
சாகித் அப்ரிடியின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு இந்திய ரசிர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, அப்ரிடியின் கருத்துக்கு அவரை தனது ட்விட்டர் பதிவு வாயிலாக வெளுத்து வாங்கியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்தப் பதிவில் மிஸ்ரா, “அன்புள்ள அஃப்ரிடி, சிலர் ஒரு முறை மட்டுமே ஓய்வு பெறுகிறார்கள், எனவே தயவு செய்து விராட் கோலியை இதிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2003 ஆம் ஆண்டில் அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் முறையே 76, 64 மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மொத்தம் 166 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Dear Afridi, some people retire only once so please spare Virat Kohli from all this. 🙏🏽 https://t.co/PHlH1PJh2r
— Amit Mishra (@MishiAmit) September 13, 2022
அப்ரிடியின் ஓய்வு கதை…
அப்ரிடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் புதியவர் அல்ல. இதுபோன்ற பல சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் கூறியிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் தரப்பில் இருந்து பதிலடியும் வாங்கி இருக்கிறார். தவிர அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை ஓய்வு பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அப்ரிடியின் முதல் டெஸ்ட் ஓய்வு 2006 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, பின்னர் இரண்டு வாரங்களில் மீண்டும் திரும்ப பெறப்பட்டது. இதேபோல், 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

மேலும், 2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த அப்ரிடி, அதன்பிறகு பிறகு அனைத்து வகையான ஃபார்மெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வற்புறுத்தலின் பேரில் அதை திரும்பப் பெற்றார். தொடர்ந்து 2015 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை அணியை வழிநடத்தினார். இறுதியாக 2017 ல் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக் அறிவித்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil