அங்கதன்
திட்டமிட்ட கச்சிதமான வெற்றி
துணைக்கண்டத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிறு அது. காத்திருப்பு வீண்போகவில்லை. இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வழக்கம்போலவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்று சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரைத் தெம்போடு தொடங்கியிருக்கிறது. மட்டை வீச்சிலும் பந்து வீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியா இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது.
எதிர்மறை உணர்வுகளை மாற்றிய வெற்றி
பல விதங்களில் இந்த வெற்றி முக்கியமானது. அண்மைக் காலத்தில் இந்திய கிரிக்கெட் எதிர்மறையான காரணங்களுக்காகவே செய்தியில் அடிபட்டுவருகிறது. வருமானப் பகிர்வு பிரச்சினை தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நிலைப்பாட்டினால் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்குபெறுவதே சந்தேகம் என்னும் நிலை இருந்தது. ஒரு வழியாக அந்த மேகம் அகன்றதும் அணியின் பயிற்சியாளர் பிரச்சினை தொடங்கியது. தற்போது பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேயின் பதவிக் காலம் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருடன் முடிகிறது. ஓராண்டுக் காலமே பதவி வகித்த கும்ப்ளேவுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஓராண்டில் இந்திய அணி பெற்றுவரும் வெற்றிகளால் கும்ப்ளேயின் இடம் தக்கவைக்கப்படும் எனக் கருதப்பட்டது.
ஆனால், வாரியமோ பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரியது. கும்ப்ளேவுக்கும் அணியினருக்கும், குறிப்பாக அணித் தலைவர் விராட் கோலிக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக கோலி இதையெல்லாம் மறுத்தார். எனினும் சந்தேக மேகம் விலகவில்லை. இது பாகிஸ்தானுடனான ஆட்டத்தைப் பாதித்துவிடுமோ என்னும் அச்சம்கூட நிலவியது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியா அலட்டிக்கொள்லாமல் ஆடி வென்றது. பல மாதங்கள் கழித்துச் சர்வதேசப் போட்டியில் ஆடும் ரோஹித் ஷர்மா சற்றே நிதானமாக ஆடினாலும் 91 ரன் எடுத்து வலுவான அடித்தளமிட்டார். அவரது ஜோடி ஷிகர் தவனும் அரை சதத்தைக் கடந்தார். யுவராஜ் சிங்கின் வயது 10 ஆண்டுகள் குறைந்துவிட்டதோ என நினைக்குமளவு அவரது அதிரடி இருந்தது (32 பந்துகளில் 53). கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் அடித்த 20 ரன் அணிக்குப் பெரும் தெம்பைக் கொடுத்தது. மழையால் 48 ஓவராகக் குறைக்கப்பட்ட நிலையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் மந்தமாகவே இன்னிங்ஸைத் தொடங்கியது. மழை அவ்வப்போது குறுக்கிட்டாலும் சீரான வேகத்தில் விக்கெட்கள் விழுந்துக் கொண்டிருந்தன. டி.எல்.எஸ். முறைப்படி 41 ஓவரில் 288 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்துத் தோற்றுப்போனது.
வெற்றிகரமான வியூகம்
பாகிஸ்தான் அணியினர் சுழல் பந்தை நன்கு ஆடுவார்கள் எனப்தால் இந்தியா துணிந்து நான்கு வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அந்தத் துணிச்சலுக்குக் கை மேல் பலன் கிடைத்தது. குமார், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பூம்ரா, பாண்ட்யா ஆகிய நால்வரும் துல்லியமாக வீசினார்கள். ரவீந்திர ஜடேஜாவின் இடது கை சுழல் வீச்சுக்கும் பலன் கிடைத்தது. பாகிஸ்தான் அணியில் பெரிய மட்டையாளர்கள் யாரும் இல்லாத பலவீனம் நன்கு உணரப்பட்டது.
இந்த வெற்றி இந்தியாவுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை அது எதிர்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க அணியின் மட்டை வீச்சு ஆழம் கொண்டது. எனவே மேலும் கவனமாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவால் சுழல் பந்தை அவ்வளவு சிறப்பாக ஆட முடியாது. எனவே ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்களிப்பு அந்தப் போட்டியில் முக்கியமானதாக இருக்கும்.
பாகிஸ்தானுடனான போட்டியில் பெரும் வித்தியாசத்தில் வென்றதால் அடுத்த இரு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வென்றாலும் இந்தியாவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியலாம். மூன்றிலும் வென்று முன்னேற வேண்டுமென்றால் மட்டை, பந்து வீச்சு ஆகியவற்றில் மட்டுமில்லாமல் களத் தடுப்பிலும் கவனம் தேவை. “இன்றைய ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு 10க்கு 9 மதிப்பெண் கொடுப்பேன். ஆனால், ஃபீல்டிங்குக்கு 6தான் கொடுக்க முடியும்” என்று கோலி ஒப்புக்கொண்டதைக் கவனிக்க வேண்டும். மட்டை வீச்சிலும் பாகிஸ்தான் அணியினர் யுவராஜ், கோலி ஆகியோர் கொடுத்த கேட்சுகளைப் பிடிக்கத் தவறியதை மறந்துவிடக் கூடாது.
இப்படிச் சில பிரச்சினைகள் இருந்தாலும் வெற்றிக் கணக்கோடு தொடங்கியிருக்கும் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பிரகாசமாக்கிக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.