India Vs England | Anand Mahindra | Sarfraz Khan: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின்னர், 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, 557 என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜடேஜா 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அறிமுகமே அதிரடி
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கி இருந்தார். தனது அறிமுக ஆட்டம் என்று கூட பாராமல் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்தார். அத்துடன் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சையும் நொறுக்கி அள்ளினார். அவர் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார்.
ஆனால், அதே உத்வேகத்துடன் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த அவர் முன்பு போல் சிறப்பான மட்டையைச் சுழற்றி அசத்தினார். அவர் 72 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கை கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் அவருக்கு ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய சீனியர் அணிக்குள் இடம் பெற போராடி வந்த சர்பராஸ் கானுக்கு ராஜ்கோட்டில் தான் நெடுநாள் கனவு நனவானது. அவர் முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ளேவிடம் இருந்து இந்திய டெஸ்ட் தொப்பியை பெற்றுக் கொண்டதை மைதானத்திற்கு வந்த அவரது தந்தை நேரில் பார்த்து பூரித்து போனார்.
இந்த தருணத்தின் போது சர்பராஸ் கானுடனிருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார். அவர் தந்தை நௌஷாத் கானை கட்டி ஆரத்தழுவி பிறகு, தந்தை நௌஷாத் கான் டெஸ்ட் தொப்பி முத்தமிட்ட காட்சி அனைவரது மனதையும் இளகச் செய்தது. தனது மகன் மீது அவர் போட்ட முயற்சிகள் அனைத்திற்கும் பலன் கிடைத்ததை எண்ணி அவர் உவகை கொண்டு ஆனந்த கண்ணீரை விம்மினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
உழைப்பின் பரிசு
இந்நிலையில், அறிமுக போட்டியிலேயே அசத்திய சர்பராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தை நௌஷாத் கானுக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை. ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் என்ன உள்ளது? தன் குழந்தைக்கு உத்வேகம் தரும் பெற்றோராக இருப்பதற்காக, சர்பராஸின் தந்தை நவுஷத் கான் ஏற்றுக்கொண்டால் அவருக்கு தார் காரை பரிசாக அளிப்பது எனது பாக்கியம் மற்றும் கவுரவம்." என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“Himmat nahin chodna, bas!”
— anand mahindra (@anandmahindra) February 16, 2024
Hard work. Courage. Patience.
What better qualities than those for a father to inspire in a child?
For being an inspirational parent, it would be my privilege & honour if Naushad Khan would accept the gift of a Thar. pic.twitter.com/fnWkoJD6Dp
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.