Angelo Mathews Tamil News: இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருப்பவர் ஆல்ரவுண்டர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ். அந்நாட்டு தேசிய கிரிக்கெட் அணிக்கான 3 ஃபார்மெட்டுகளிலும் கேப்டனாக இருந்த இவர் 2014ம் ஆண்டு ஐசிசி டி 20 உலகக்கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக செயல்பட்டார். மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை, மற்றும் 2009, 2012 ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆகியவற்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியில் இடம்பிடித்திருந்தார்.
தற்போது சாதாரண வீரராக விளையாடி வரும் மேத்யூஸ் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6631 ரன்களையும், 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 218 ஒருநாள் போட்டிகளில் 5835 ரன்களையும் 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், 78 டி20 போட்டிகளில் 1148 ரன்களையும், 38 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
பரிதாபமான சாதனையை படைத்த மேத்யூஸ்…
இந்நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ், வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இலங்கை அணியில் இடம்பிடித்திருக்கிறார். சட்டோகிராமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சாய்ந்தன.
எனினும், ஆல்ரவுண்டர் மேத்யூஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் இரட்டைச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்களும் ஏமாற்றமாக அமைந்தது.
மேத்யூஸ் இப்படி ஏமாற்றமளித்து இது முறை அல்ல. முன்னதாக 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். தற்போது அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 199 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை படைத்துள்ளார்.
This hurts more than a breakup.😥💔#SLvsBAN #anji pic.twitter.com/6rhU5Juz22
— Kavinda Chenuka (@KavindaChenuka) May 16, 2022
Nothing more hurtful than this 💔💔#SLvsBAN #BANvSL #WTC23 https://t.co/siC6I1LHNp
— Krish Narang (@knarangg) May 16, 2022
3வது ஆட்ட நாள்…
வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 153 ஓவரில் 397 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்ட நாளில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் மஹ்முதுல் ஹசன் ஜாய் 48(95) ரன்களுடனும், அரைசதம் அடித்த தமீம் இக்பால் 75 (101) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி 264 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.