பிப்.7, 1999.... தலைநகர் டெல்லி பரபரத்துக் கொண்டிருந்தது. டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானமும் பரபரத்துக் கொண்டிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அசாருதீன் தலைமையிலான இந்திய அணி நிர்ணயித்த 420 ரன்கள் இலக்கை நோக்கி மிரட்டலாக ஆடிக் கொண்டிருந்தது வாசிம் அகரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. 101 ரன்கள் வரை விக்கெட் இழப்பே இன்றி, இந்திய பவுலர்களை அச்சுறுத்தினர் பாகிஸ்தான் ஓப்பனர்கள்.
Advertisment
அப்போது பந்து வீச வந்தவர் அனில்கும்ப்ளே. அப்போதே முதல் விக்கெட். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மொத்த பாகிஸ்தானையும் அள்ளி விழுங்கியிருந்தார் கும்ப்ளே. 74 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து முழுதாய் 10 விக்கெட்டுகளை அள்ளி, பாகிஸ்தானை 207 ரன்களில் சுருட்டி, இந்திய அணிக்கு மெகா வெற்றியைத் தேடித் தந்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் எனும் பெருமையைப் பெற்று இந்தியாவுக்கு கவுரவம் சேர்த்தார் அனில் கும்ப்ளே. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து பவுலர் ஜிம் லேகர், டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.