worldcup | indian-cricket-team | sports | cricket | anil-kumble: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்களும், விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாகவும், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் சுழல் ஆல்ரவுண்டர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும் தேர்வாகியுள்ளனர்.
இந்திய அணி பலவீனம் - அனில் கும்ப்ளே கருத்து
இந்நிலையில், உலகக் கோப்பை இந்திய அணியில் உள்ள பலவீனத்தை இந்தியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே போட்டு உடைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "ஒருநாள் உலகக் கோப்பையைப் பற்றி பேசும் போது, கடந்த உலகக் கோப்பையில் இருந்து இந்த உலகக் கோப்பை வரை கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு அதிக ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இது ஒருபோதும் கவனிக்கப்படவில்லை. உங்களிடம் அந்த விருப்பங்களை வழங்கும் பேட்டர்கள் இல்லை, மேலும் பந்து வீச்சாளர்கள் உங்களுக்கு கொஞ்சம் பேட்டிங் கொடுப்பது இரண்டாம்பட்சம். ஆனால் பேட்டர்கள் உங்களுக்கு பந்துவீச்சு விருப்பங்களை வழங்குவது நிச்சயமாக பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது.
நமக்கு நான்கு ஆண்டுகள் இருந்தன. அப்போது அந்த வீரர்களை உருவாக்கியிருக்க வேண்டும். அடையாளம் காணப்பட்ட வீரர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் அடையாளம் கண்டு சரி, நீங்கள்தான் எனக்கு விருப்பங்களைத் தரப் போகிறீர்கள் என்று கூறியிருக்க வேண்டும். உதாரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உங்களுக்குத் தெரியும், அவர் கொஞ்சம் லெக் பிரேக் பந்து வீசுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் அவர் எந்த போட்டியிலும் பந்து வீசுவதை நான் பார்த்தது இல்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் பந்துவீசுக்கூடியவர். இப்போது அவரது முதுகுப் பிரச்சினையால் அவர் உள்ளே வந்து பந்து வீசுவாரா என்பது எனக்குத் தெரியாது. முன்பெல்லாம் ரோகித் பந்துவீச்சுவார். அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் பந்துவீசுவதில்லை. அவருக்கு அந்த பிரச்சனை இருப்பதாக எனக்குத் தெரியும். அதனால் அவர் பந்து வீசவும் போவதில்லை.
எனவே அது யாராக இருக்கும்? உங்களுக்கு டாப் ஆடரில் உள்ள விருப்பங்கள் தேவை. இந்த வரிசையில் உங்களுக்குத் தெரிந்திருந்தால், உண்மையான பேட்டிங்கின் ஆழத்தை நீங்கள் அறிந்திருந்தால், 8வது இடத்தில் இருக்கும் ஜடேஜா சிறந்த தேர்வாக இருந்திருப்பார், ஆனால் இன்று அவர் 7வது இடத்தில் இருக்கிறார்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“