இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே பேட் செய்தபோது, கடைசி ஓவரில் ஒரு பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இன்னிங்ஸ் முடிந்ததும் ஷிவம் துபேவை பரிசோதித்தபோது தலைக்குள் லேசாக அதிர்வு இருப்பதாக உணர்ந்தார். இத்தகைய காயத்துக்கு மாற்று வீரரை அனுமதிக்கலாம் என்ற விதிப்படி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஓவர்டான் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
இருப்பினும், ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் முழுமையான பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி விதிமுறையை மீறி விளையாட வைத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. 'இந்த முடிவை நாங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை' என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி வருகிறது. இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் தங்களது இந்திய கிரிக்கெட் அணி மீது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காட்டம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்தை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பேசிய வீடியோவை பதிவிட்டு அவரது அப்பா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தைப் போல் அனிருதா மிகவும் தைரியமாகவும், இந்திய கிரிக்கெட் அணி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசுவதாகவும் அவரைப் பாராட்டி வாருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அனிருதா ஸ்ரீகாந்த், "அணிக்குள் ஹர்ஷித் ராணா வந்ததால் உங்களது பவுலிங் யூனிட் எவ்வளவு பலமாக மாறியிருக்கிறது பாருங்கள். அதனால், கேப்டன் சூரியகுமார் யாதவால் எளிமையாக பவுலர்களை சுழற்ற முடிகிறது. 10-வது ஓவருக்குப் பின் ஹர்ஷித் ராணா வருகிறார், 3 விக்கெட்டை எடுக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறார்.
அவர் ஆடும் லெவன் அணியில் இல்லாமல் இருந்திருந்தால், யார் போட்டு இருப்பார்கள். ஹர்திக் முதல் ஓவரிலே அடி வாங்கினார். அவர் தனது சிறப்பான பவுலிங்கில் இல்லை. அவர் தான் டெத் ஓவர்களான கடைசி 2 ஓவர்களை போட்டிருக்க வேண்டும். அவர் வேண்டாம் என்றால், எக்ஸ்ட்ரா ஸ்பின்னரான அபிஷேக் சர்மாவுக்குத் தான் நீங்கள் பவுலிங் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஷிவம் துபேவுக்குத் தான் நீங்கள் பவுலிங் கொடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் அதைத் தான் எதிர்பார்த்து இருப்பார்கள்.
ஒரு பேட்ஸ்மேனாக, நீங்கள் இந்த பவுலரை நான் சமாளிக்க வேண்டும். 5-வது அல்லது 6-வது ஓவரைப் போட வரும் பவுலரை அடித்து ஆடலாம் என திட்டமிட்டிருப்போம். இப்போது அந்த திட்டம் எதுவும் இருந்திருக்காது. நீங்கள் பேட்டிங் ஆடுகிறீர்கள், திடீரென ராணா பந்து போட வருகிறார்.
ராணாவை களமிறங்குவது பற்றி குறைந்தபட்சம் எதிரணியின் அனுமதியை நீங்கள் பெற்று இருக்க வேண்டும். அதுதான் விதி. ஆனால், எப்படித்தான் இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கேப்டன் ஜோஸ் பட்லரிடம் சென்று துபே மூளையர்ச்சியை உணர்வதால் அவரால் வர முடியவில்லை. நாங்கள் மாற்று வீரரை களமிறக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டிருக்க வேண்டும். பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் சென்று புகார் அளித்திருக்கிறார். அதேபோல், பட்லர் அவ்வளவு அதிருப்தி அடைந்திருக்கிறார். இந்த மாறியான வெற்றி அவசியம் இல்லை. அது நல்லாவும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.