கோவை செட்டிப்பாளையத்தில் நவீன கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் அனிதா பால்துரை மற்றும் ஐந்து முறை தேசிய கூடைப்பந்து சாம்பியன் பட்டம் வென்ற சுகவனேஷ்வர் ஆகியோர் இந்த அரங்கத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய அனிதா பால்துரை, கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியில் இத்தகைய ஓர் அரங்கத்தைத் திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். எட்டு ஆண்டுகளாக இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்த தனது பயணத்தில் சந்தித்த சவால்களையும், அவற்றை கடந்து பெற்ற அங்கீகாரத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். இதற்கு தனது தந்தையின் சுதந்திரமும் நம்பிக்கையும் முக்கிய காரணங்களாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/22/anitha-paldurai-111-2025-07-22-20-29-14.jpg)
விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் தனக்கு மூன்று முறை கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு முறையும் தனது தந்தையின் ஊக்கத்தால் மீண்டு வந்து மீண்டும் வெற்றி பெற்றதாகவும் அனிதா பால்துரை தெரிவித்தார்.
விளையாட்டு என்பது சவால்களை எதிர்கொள்வது, சரியான முடிவுகளை எடுப்பது, தோல்வியில் இருந்து மீண்டு எழுவது, நேரத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்துவது போன்ற வாழ்வியல் பாடங்களை கற்றுத் தருவதாக அவர் கூறினார். குறிப்பாக, கடின உழைப்பு, கூட்டு முயற்சி, ஒழுக்கம் ஆகிய மூன்றின் மதிப்பை சிறு வயதிலிருந்தே விளையாட்டு கற்றுக்கொடுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
"விளையாட்டு பெண்களுக்கு உகந்ததல்ல" என்று பேசப்பட்ட காலகட்டத்தில் இருந்து வந்த தான், ஒரு பெண் தனது குடும்பத்தையும் தனது கனவுகளையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கு தனது குடும்பத்தின் ஆதரவு, நம்பிக்கை மற்றும் ஊக்கமே முக்கிய காரணம் என்றும் அனிதா பால்துரை குறிப்பிட்டார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்