32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சண்டிகர், மிசோரம், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், விதர்பா ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்நிலையில், இந்த தோரில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் மோதும் ஆட்டம் விஜயநகரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் போடப்படும் முன் மழை புகுந்து விளையாடியதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் அளிக்கப்பட்டது. தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26ம் தேதி உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது.
அருணாச்சல பிரதேசம் - பஞ்சாப் மோதல்
இதனிடையே, சி பிரிவில் இடம்பெற்றுள்ள அருணாச்சல பிரதேசம் - பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் வீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய அருணாச்சல பிரதேசம் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெக்கி நேரி 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 165 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 10 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து, களத்தில் இருந்த தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் உடன் ஜோடி அமைத்தார் அன்மோல்பிரீத் சிங். இந்த ஜோடியில் இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இதில் தான் எதிர்கொண்ட பந்துகளை வெளுத்து வாங்கிய 35 பந்தில் சதம் விளாசி மிரட்டினார்.
மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரிகளுடன், 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 115 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அதிரடி ஆட்டம் மூலம் பஞ்சாப் அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வரலாறு படைத்த அன்மோல்ப்ரீத்
இந்த நிலையில், விஜய் ஹசாரே டிராபி போட்டியில் 30 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங்.
மேலும், 2010-ம் ஆண்டு மகாராஷ்டிர அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடி 40 பந்துகளில் சதம் விளாசிய யூசுப் பதானின் சாதனையை முறியடித்துள்ளார் அன்மோல்ப்ரீத் சிங்.
உலக அளவில் அன்மோல்ப்ரீத் சிங், மூன்றாவது அதிவேக லிஸ்ட் ஏ போட்டி சதத்தை விளாசியுள்ளார். அன்மோல்ப்ரீத் ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்டோபர் 2023 இல் மார்ஷ் கோப்பையில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக வெறும் 29 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி வீரரான ஏ.பி டி வில்லியர்ஸ், ஜனவரி 2015 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
அதிவேக லிஸ்ட் ஏ போட்டி சதம்
1 - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்: டாஸ்மேனியா vs தெற்கு ஆஸ்திரேலியா, 29 பந்துகள்.
2 - ஏபி டி வில்லியர்ஸ்: தென் ஆ ப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், 31 பந்துகள்.
3 - அன்மோல்ப்ரீத் சிங்: பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 35 பந்துகள்.
4 - கோரி ஆண்டர்சன்: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 36 பந்துகள்.
5 - கிரஹாம் ரோஸ்: சோமர்செட் vs டெவோன், 36 பந்துகள்.
26 வயதான அன்மோல்பிரீத் சிங் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், ஐ.பி.எல் 2025 தொடருக்கான ஏலத்தின் போது அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.