டெண்டுல்கர் என்கிற பெயர் மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் நுழைகிறது. இந்த முறை சச்சின் டெண்டுல்கராக அல்ல, அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கராக!
அர்ஜூன் டெண்டுல்கர் (வயது 18), அடுத்த மாதம் இலங்கை செல்லவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஜூன் 7-ம் தேதி பெங்களூருவில் கூடிய ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டி அர்ஜூன் டெண்டுல்கர் பெயரை அணியில் இணைத்திருக்கிறது.
இலங்கையில் இரு 4 நாள் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் யு19 அணி விளையாடுகிறது. 4 நாள் போட்டிக்கு தனி அணியும், ஒருநாள் போட்டிகளுக்கு தனி அணியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 நாள் போட்டி அணியில்தான் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றிருக்கிறார்.
அர்ஜூன் அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார்? ‘அஞ்சலியும் நானும் எப்போதும் அர்ஜூனின் தேர்வுக்கு பக்கபலமாக இருப்போம். அவனது வெற்றிக்கு பிரார்த்திப்போம்’ என கூறியிருக்கிறார் சச்சின்.
அர்ஜூன் முதல் முறையாக தேசிய யு19 அணியில் இடம் பெற்றாலும், இந்திய சீனியர் அணிக்கே அவர் மிகவும் அறிமுகமானவர்தான்! கடந்த 6 ஆண்டுகளாக இந்திய சீனியர் அணியின் வலைப்பயிற்சிகளின்போது பந்து வீசுபவராக அர்ஜூன் திகழ்ந்திருக்கிறார். சச்சின் விளையாடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு டூர்களிலும் இடம்பெற்று லார்ட்ஸ், மெல்போர்ன் மைதானங்களில் பந்து வீசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு தயாரானபோது அர்ஜூன் பந்து வீசினார். அப்போது தனது வேகம் மற்றும் ஸ்விங் பந்துகளால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலரை அவர் திணறடித்தை பார்க்க முடிந்தது.
மும்பை யு19 அணியின் பயிற்சியாளர் சதிஷ் சம்ந்த் கூறுகையில், ‘இந்த சீஸனில் தனது பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக அர்ஜூன் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். தனது பந்து வீச்சில் புதிய திறமைகளை அவர் புகுத்திக் கொண்டிருக்கிறார். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்நோக்கி திரும்பும் வகையில் அவர் வீசும் பந்துகள்தான் அவரது பிரதான ஆயுதம்!
பந்துகளை சரியான இடத்தில் வீசுவது, பவுன்சர் வீசுவது, யார்க்கர் மற்றும் ஸ்லோ பால் வீசுவது ஆகியவற்றில் தேர்ந்தவர். கன்ஸிஸ்டன்சி மட்டும் தேவை! அது பயிற்சியின் மூலமாக வந்துவிடும்.’ என்கிறார் சமந்த்.
கடந்த ஆண்டு கூச் பெஹர் டிராபி போட்டியில் அர்ஜூன் 19 விக்கெட்டுகளை சாய்த்தார். அவற்றில் இரு ஆட்டங்களில் மட்டும் தலா 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த விக்கெட்டுகளில் வலது கை ஆட்டக்காரர்களை அவர் கிளீன் போல்ட் ஆக்கியவையும், இடது கை பேட்ஸ்மேன்களை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தவையுமே அதிகம்!
அர்ஜூன் டெண்டுல்கரின் கை ஆக்ஷனும், அவரது உயரமும் பந்து வீச்சுக்கு பலம் சேர்ப்பதாக கூறுகிறார் சமந்த். இலங்கை செல்லும் யு19 அணிக்கு தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் தான் பயிற்சியாளர்! இவர் தனது பெரும்பாலான சர்வதேச ஆட்டங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூன் டெண்டுல்கரை தேர்வு செய்த தேசிய ஜூனியர் அணி தேர்வு கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் ஆசிஷ் கபூர், ஞானேந்திர பாண்டே, ராகேஷ் பரிக் ஆகியோரும் சச்சினுடன் மைதானத்தை பகிர்ந்து கொண்டவர்கள்தான்!
இலங்கை டூருக்காக மொத்தம் 25 வீரர்களை தேர்வு செய்த இவர்கள், அவர்களுக்கு தர்மசாலாவில் பயிற்சி முகாம் நடத்தினர். அங்கு சில போட்டிகளை நடத்தியே 4 நாள் போட்டிக்கு தனி அணியையும், ஒரு நாள் போட்டிக்கு தனி அணியையும் தேர்வு செய்தனர். ஒரு நாள் போட்டிக்கான அணியில் அர்ஜூன் பெயர் இடம் பெறவில்லை.
இந்திய ஜூனியர் 4 நாள் போட்டி அணிக்கு டெல்லி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத் கேப்டனாக தேர்வு பெற்றிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கு ஆர்யன் ஜூயல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:
நான்கு நாள் போட்டி அணி: அனுஜ் ராவத்(விக்கெட் கீப்பர், கேப்டன்), அதர்வா டைட்(விதர்பா கிரிக்கெட் சங்கம்), டேவ்தத் படிக்கல் (கேரளா), ஆர்யன் ஜூயல்(துணை கேப்டன், விக்கெட் கீப்பர்- உத்தரபிரதேசம்), யாஷ் ரதோட்(விதர்பா), ஆயுஷ் பதோனி (டெல்லி), சமீர் சவுத்ரி(உ.பி.), சித்தார்த் தேசாய் (குஜராத்), ஹர்ஷ் தியாகி (டெல்லி), ஒய்.டி.மங்வானி (மஹாராஷ்டிரா), அர்ஜூன் டெண்டுல்கர் (மும்பை), நேகல் வதேரா (பஞ்சாப்), ஆகாஷ் பாண்டே (குஜராத்), மொகித் ஜாங்க்ரா (உ.பி.), பவன் ஷா (மஹாராஷ்டிரா)
ஒருநாள் போட்டிக்கான அணி: ஆர்யன் ஜூயல் (கேப்டன் -விக்கெட் கீப்பர், உத்தரபிரதேசம்), அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர், டெல்லி), டேவ்தத் படிக்கல்(கேரளா), அதர்வா டைட் (விதர்பா), யாஷ் ரதோத் (விதர்பா), ஆயுஷ் பதோனி(டெல்லி), சமீர் சவுத்ரி (உ.பி.), சித்தார்த் தேசாய் (குஜராத்), ஹர்ஷ் தியாகி (டெல்லி), ஒய்.டி.மங்வானி (மஹாராஷ்டிரா), அஜய் தேவ்காட்(ஹைதராபாத்), ஒய்.ஜெய்ஸ்வால் (மும்பை), மொகித் ஜாங்க்ரா (உ.பி.), ஆகாஷ் பாண்டே (குஜராத்), பவான் ஷா (மஹாராஷ்டிரா)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.