Arjun Sachin Tendulkar Tamil News: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இடக்கை வேகப்பந்து வீச்சாளாரான இவர் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.
கடந்த சீசனில் மும்பை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தபோது, 22 வயதான அர்ஜுன் மும்பை கிரிக்கெட் வாரிய மூத்த தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஒரு ஜூனியராக இவருக்கு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணி மும்பை இந்தியன்ஸ் அவரை ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், அர்ஜுன் இன்னும் மும்பை அணியின் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.

தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் வரும் சீசன் முதல் கோவா அணிக்காக களமிறங்க உள்ளார். அவரின் இடமாற்ற செயல்முறையின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் ஜூனியர், நேற்று வியாழன் அன்று, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (எம்சிஏ) தடையில்லாச் சான்றிதழுக்கு (என்ஓசி) விண்ணப்பித்தார்.
இது தொடர்பாக கோவா கிரிக்கெட் சங்க செயலாளர் விபுல் பாட்கே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “வரவிருக்கும் சீசனில் ஒரு தொழில்முறை வீரராக கோவா மாநிலத்திற்காக விளையாட அர்ஜுன் விருப்பம் தெரிவித்தார். அதனால் அவர் எங்களை அணுகினார். எம்சிஏவில் இருந்து முதலில் ஒரு என்ஓசி பெறச் சொன்னோம். அவரது உடற்தகுதி மற்றும் திறன் சோதனையை நாங்கள் நடத்துவோம். பல வீரர்களைப் போல அர்ஜுன் கோவாவுக்காக விளையாட விரும்பினார். ஆனால் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரு செயல்முறை பின்பற்றப்படும், ”என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்டி (SRT) ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தனது அறிக்கையில், “அர்ஜுன் தனது தொழில் வாழ்க்கையின் இந்த தருணத்தில் மைதானத்தில் அதிக நேரம் விளையாடுவது முக்கியம். இந்த மாற்றம் அர்ஜுன் அதிக போட்டி நிறைந்த போட்டிகளில் இடம்பெறுவதற்கான நிகழ்தகவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை தொடங்குகிறார்.” எண்டு கூறியுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil