போலந்து நாட்டின் சிலேசியா நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியின் கம்பு ஊன்றி தாண்டும் போல் வால்ட் விளையாட்டில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அர்மண்ட் மோண்டோ டுப்லாண்டிஸ் 10-வது முறையாக உலக சாதனையை தகர்த்து அசத்தியுள்ளார்.
டுப்லாண்டிஸ் டைமண்ட் லீக் தொடரில் 6.26 மீட்டர் உயரத்தை கடந்து அசத்தி இருக்கிறார். அவர் அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போல் வால்ட் போட்டியில் 6.25 மீட்டர் தூரத்தை எட்டி தங்கம் வென்று அசத்தினார். அதன் மூலம் அவர் ஒலிம்பிக் போல்வால்ட் போட்டியில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.
இந்த ஒலிம்பிக் போட்டியின் போது, மோண்டோ டுப்லாண்டிஸ் தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் வியக்கத்தக்க வகையில் 6.25 மீட்டர் தூரத்தை எட்டினார். அதன் மூலம் ஒன்பதாவது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து அசத்தி இருந்தார். அவர் தனது முதல் உலக சாதனையை பிப்ரவரி 8, 2020 அன்று பதிவு செய்திருந்தார். தற்போது 10வது உலக சாதனையை நிகழ்த்தி பிரமிக்க வைத்திருக்கிறார்.
மோண்டோ டுப்லாண்டிஸின் உலக சாதனைகள்:
6.26: ஸ்டேடியன் ஸ்லாஸ்கி, சோர்சோவ் (போலந்து), 25 ஆகஸ்ட் 2024
6.25: ஸ்டேட் டி பிரான்ஸ், பாரிஸ் (பிரான்ஸ்), 5 ஆகஸ்ட் 2024
6.24: எக்ரெட் ஸ்டேடியம், ஜியாமென் (சீனா), 20 ஏப்ரல் 2024
6.23: ஹேவர்ட் ஃபீல்ட், யூஜின் (அமெரிக்கா), 17 செப்டம்பர் 2023
6.22 (i):மைசன் டெஸ் ஸ்போர்ட்ஸ், கிளர்மாண்ட்-ஃபெராண்ட் (பிரான்ஸ்), 25 பிப்ரவரி 2023
6.21: ஹேவர்ட் ஃபீல்ட், யூஜின் (அமெரிக்கா), 24 ஜூலை 2022
6.20 (i): ஸ்டார்க் அரீனா, பியோகிராட் (செர்பியா), 20 மார்ச் 2022
6.19 (i): ஸ்டார்க் அரீனா, பியோகிராட் (செர்பியா), 07 மார்ச் 2022
6.18 (i): எமிரேட்ஸ் அரினா, கிளாஸ்கோ (ஐக்கிய இராச்சியம்), 15 பிப்ரவரி 2020
6.17 (i): அரினா, டோருன் (போலந்து), 08 பிப்ரவரி 2020.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“