இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் சிடிலுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலி அணியில், டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றியும், மார்கஸ் ஹாரிஸ் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதன் பின்னர் மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் ஸ்மித்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கிய போது லபுஸ்சேன் தொடர்ச்சியாக 4-வது அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 144 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் 67 ரன்களில் க்ளீன் போல்டு ஆனார். மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித்தும் அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை கொட்டியதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் சுமித் 60 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக பலத்த காற்று வீசியதால் ஸ்டெம்ப் மீது பெய்ல்ஸ் இல்லாமல் சிறிது நேரம் ஆட்டம் நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பெய்ல்ஸ் இல்லாமல் போட்டி நடைபெற்றது. காற்று பலமாக வீசியதால், பெய்ல்ஸ் அடிக்கடி கீழே விழுந்தது.
இதைத் தொடர்ந்து கள நடுவர்களான குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் ஆலோசித்து, பெய்ல்ஸை எடுத்துவிட்டு ஆட்டத்தைத் தொடரச் செய்தனர்.
பொதுவாக, ஸ்டெம்ப்புகளில் பந்து பட்டால் மட்டுமே அவுட் கொடுக்கப்படாது. பெய்ல்ஸ் கீழே விழுந்தால் தான் அவுட் கொடுக்கப்படும். இதை நடந்து முடிந்த ஐபிஎல், உலகக் கோப்பை என பல தொடர்களில் நடந்த பல ஆட்டங்களில் கண்கூடாகவே நாம் பார்க்க நேரிட்டது. ஸ்டெம்ப்புகளை பந்து வேகமாக தாக்கியும், பெய்ல்ஸ் கீழே விழாத காரணத்தால், பல அவுட் கொடுக்கப்படாததையும் பார்த்தோம். நிலைமை இப்படியிருக்கையில், பெய்ல்ஸ் இல்லாமல் எப்படி ஆஷஸ் தொடரில் விளையாடினார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
ஆனால், ஐசிசி தனது விதியில் இந்த நடைமுறைக்கு அனுமதி அளிக்கிறது என்பதே உண்மை.
ஐசிசி விதியின் பிரிவு 8.5படி, "தேவைப்பட்டால், அம்பயர்கள் பெய்ல்ஸை நீக்கிவிட்டு ஆட்டத்தை நடத்தலாம். அப்படி பெய்ல்ஸ் நீக்கப்படும் பட்சத்தில், எதிர் முனையில் இருக்கும் பெய்ல்ஸ்களும் எடுக்கப்பட வேண்டும். கள சூழலைப் பொருத்து, அம்பயர்கள் இம்முடிவை எடுக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஆட்டத்தின் போதும், இதுபோன்று பெய்ல்ஸ் நீக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.