ஐ.பி.எல் 2025 தொடர் மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 10 அணிகளுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளன. அந்தந்த அணிகள் தக்கவைக்கும் வீரர்களை தவிர்த்து விட்டு மற்ற வீரர்களை கழற்றி விட உள்ளன. இதேபோல், அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் மாற்றமும் நடக்க உள்ளன.
கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸை விட்டு வெளியேறி இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர். இதேபோல், டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கின் பதவிக்காலமும் முடிவடைந்து, அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
சமீபத்திய தகவலின் படி, இன்னும் மற்ற அணிகளும் தங்களது துணை ஊழியர்களை மாற்றலாம் எனத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஆகியோர் ஐ.பி.எல் 2025-க்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெஹ்ரா மற்றும் சோலங்கி ஆகிய இருவரும் 2022ல் அந்த அணியில் இணைந்தனர்.
2022 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அதே ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. தொடர்ந்து நடந்த 2023 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்சில் இருந்து டிரேடு முறையில் மும்பை இந்தியன்சுக்கு மாற்றம் பெற்றார். அதனால், இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது.
இந்நிலையில், நெஹ்ராவும் சோலங்கியும் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பயிற்சியாளர் குழுவில் சேர குஜராத் டைட்டன்ஸ் யுவராஜ் சிங்குடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
“கார்டுகளில் நிறைய மாற்றங்கள். ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் விக்ரம் சோலங்கி ஆகியோர் முன்னேற வாய்ப்புகள் அதிகம் மற்றும் யுவராஜ் சிங்கைச் சுற்றி விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தற்போது எதுவும் இறுதி செய்யப்படவில்லை, ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் சில பெரிய மாற்றங்கள் இருக்கலாம்,” என்று குஜராத் அணி முக்கிய நிர்வாகி ஒருவர் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் ஏற்கனவே அந்த அணியில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அந்த அணியின் பயிற்சியாளர்களான ஆஷிஷ் கபூர், நயீம் அமீன், நரேந்தர் நேகி மற்றும் மிதுன் மன்ஹாஸ் ஆகியோரும் நெஹ்ராவும் சோலங்கியும் பிரிந்தால் அந்த உரிமையுடனான தொடர்பை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.