Tamilnadu minster K. Ponmudi son ashok sigamani selected as Tamil Nadu Cricket Association (TNCA) Tamil News
Tamil Nadu Cricket Association - Dr. P. Ashok Sigamani Tamil News: இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) இருந்து வருகிறது. கடந்த 1932 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கம் பல வரலாற்று மைல்கற்களையும், இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
Advertisment
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதில் தலைவர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரும், தற்போதைய துணைத்தலைருமான அசோக் சிகாமணியும், அவரை எதிர்த்து பிரபுவும் போட்டியிட்டனர். இந்த போட்டியாளர்களில், அசோக் சிகாமணி முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் திகழ்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அணியைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார்.
இதனிடையே, விதிகளை மீறி அசோக் சிகாமணி உள்ளிட்ட சிலர் தேர்தலில் போட்டியிடுவதால், இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால், இது சர்ச்சைக்குரிய தேர்தலாக மாறியது. தற்போது, பிரபு தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
சீனிவாசன் - ரூபா குருநாத் - அசோச் சிகாமணி
Advertisment
Advertisements
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் சக்தி வாய்ந்த மனிதராக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் இருந்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவரான அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அந்தப் பதிவியில் இருந்து விலகினார். சுமார் 15 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாத சக்தியாக அவர் இருந்தார். அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்தாலும், நேரடி பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்த கிரிக்கெட் சங்க தலைவர் வேறு யாரும் இல்லை. இவரது சொந்தமகளான ரூபா குருநாத் தான். அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்த சீனிவாசனின் ஆதரவுடன் தான், அமைச்சர் பொன்முடியின் மகனும் கிரிக்கெட் நிர்வாகியுமான அசோச் சிகாமணி, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, தற்போது போட்டியின்றி தேர்வாகியும் இருக்கிறார்.
அசோச் சிகாமணி போட்டியின்றி தேர்வு
இன்று நடைபெற இருந்த தேர்தலில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 170-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்று இருந்தனர். ஆனால், காலையில் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் போதே, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு, தனது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் அசோக் சிகாமணி, போட்டியின்றி, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவரும் அசோக் சிகாமணி, அப்போதே தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை துணைத்தலைவராக்கினார் ஸ்ரீநிவாசன். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழக கிரிக்கெட் சங்க செயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.