6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பாகிஸ்தானில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் சேர்த்தனர்.
தொடர்ந்து 343 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நேபாளம் அணி 104 ரன்கள் மட்டும் எடுத்து 23.4 வது ஓவரிலே ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட் , ஷாஹீன் ஷா அப்ரிடி , ஹரிப் ரவுப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் தோற்கடிக்கும் அணியாக இருக்கும் என்றும், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் மிரட்டலான பேட்டிங் எதிரணிக்கு சவால் கொடுக்கும் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் விருப்பமானவை. கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால், இந்த ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் மிரட்டலான அணியாக இருக்கும்.
பாகிஸ்தான் ஒரு அசாதாரண அணியாக இருக்கிறது. இது அவர்களின் (பாகிஸ்தான்) அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தது. விதிவிலக்கான கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் எப்போதும் உருவாக்கியுள்ளது. அவர்களின் டேப்-பால் கிரிக்கெட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதன் மூலம் அவர்கள் எப்போதும் நம்பமுடியாத வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளனர். மேலும், 90களின் பிற்பகுதி மற்றும் 2000களின் போது அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது.
ஆனால், அவர்கள் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்றதன் மூலம், கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அவர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு முதன்மைக் காரணமாகும். அவர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்-கையும் கொண்டுள்ளனர். கூடுதலாக, சமீபத்திய பிக் பாஷ் லீக் தொடருக்கு 60-70 பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர்." என்று அவர் கூறினார்.
ஆசிய கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் வருகிற செப்டம்பர் 2ம் தேதி இலங்கையில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் நேபாளம் அணியை பாந்தாடியுள்ளது. அதே உத்வேகத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும். இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். எனவே, இவ்விரு அணிகள் சந்திக்கும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“