Ravichandran Ashwin 2023 ODI World Cup Tamil News: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023ல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார். மேலும், மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்றும் பரிந்துரைத்தார்.
கடந்த அக்டோபாரில் மும்பையில் பிசிசிஐயின் 91 வது ஆண்டு பொதுக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு பேசிய ஜெய் ஷா, “ஆசியா கோப்பைக்கான நடுநிலை இடம் முன்னோடியில்லாதது அல்ல, நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது. எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் 2023 ஆசிய கோப்பைக்காக, போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியிருந்தார்.

ஜெய் ஷா-வின் இந்த கருத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) கோபமடையச் செய்தது. இந்த விவகாரத்தில் தனது மௌனத்தை உடைத்த முன்னாள் பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா, கடுமையான கருத்துகளுடன் பல கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதேபோல், தற்போதைய தலைவர் நஜாம் சேத்தி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் ஆசிய கோப்பையை நடத்த விரும்புவதாகவும், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பாது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, பஹ்ரைனில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்திற்குப் பிறகும், 2023 ஆம் ஆண்டு போட்டிக்கான இடத்தை இன்னும் முடிவு செய்யாத குழுவுடன் தொடர்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பிசிபியின் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் இந்த போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஷ்வின் பதில்
இப்படியாக மாறி மாறி இரு கிரிக்கெட் வாரியங்களும் வார்த்தைப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்த தலைப்பு பற்றி பேசுகையில், “சின்ன வயசுல இதுதாலம் நடக்கும். எங்க வீட்டுக்கு நீ வரமாட்ட, அதுனால நா உங்க வீட்டுக்கு வர மாட்டேன். அதேமாறி இங்க என்ன நடக்குதுன்னா, பாகிஸ்தான் நாங்களும் வேர்ல்டு கப்புக்கு வரமாட்டோம்ன்னு சொல்லிருக்காங்க. ஆனால், அது நடக்காதுன்னு நான் நினக்கிறேன்.
கடைசியா எங்க நடக்கும்னு பாத்தீங்கன்னா… துபாயிலே நிறைய நடக்குது. துபாயிலே தான் நடந்திருக்கு. ஸ்ரீலங்கால (இலங்கை) நடக்கலாம், அப்படிங்கற மாறி ஏசியா கப் சொல்லுறாங்க (ஏசிசி). 50 ஓவர் வேர்ல்டு கப்புக்கு இது ஒரு முக்கியமான முன்னிலையா இருக்கும். துபாயில் நிறைய போட்டிகள் நடந்துருக்கு. ஸ்ரீலங்கால நடந்தா நான் பார்க்க சந்தோஷப்படுவேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பையைத் தவிர, 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியையும் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தங்கள் நாட்டில் திரும்பியதிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் திட்டமிடப்படும் முதல் ஐசிசி (ICC ) போட்டி இதுவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil